அண்ணாமலைக்கு பதில் புதிய தலைவர்?: மத்திய பா.ஜ., தலைமை ஆலோசனை
அண்ணாமலைக்கு பதில் புதிய தலைவர்?: மத்திய பா.ஜ., தலைமை ஆலோசனை
ADDED : ஜூலை 01, 2024 04:43 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால், தமிழகத்துக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிப்பது குறித்து, தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது.
தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆண்டுதோறும் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு விடுக்கிறது.
அந்த அடிப்படையில், இந்தாண்டு தமிழகத்தில் இருந்து அண்ணாமலை, அப்படிப்புக்காக தேர்வாகி உள்ளார்.
நான்கு மாதங்கள் லண்டனில் தங்கி, படிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக வரும் ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம் திரும்ப வாய்ப்புள்ளது.
நான்கு மாதங்களுக்கு தமிழக பா.ஜ.,வுக்கு தலைவர் இல்லாத சூழ்நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, மாற்று ஏற்பாடு குறித்து, மத்திய பா.ஜ., தலைமை ஆலோசித்து வருகிறது. சில தினங்களுக்கு முன், மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழிசை சந்தித்து பேசியுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம் ஆகியோரில் ஒருவரை, புதிய தலைவராகவோ அல்லது பொறுப்பு தலைவராகவோ நியமிக்கலாமா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.