அங்கீகாரமில்லாத மனைகள் பதிவை தடுக்க வருகிறது புதிய கட்டுப்பாடு
அங்கீகாரமில்லாத மனைகள் பதிவை தடுக்க வருகிறது புதிய கட்டுப்பாடு
ADDED : ஜூலை 23, 2024 03:14 AM

சென்னை : அங்கீகாரமில்லாத மனைகளை தடையை மீறி பதிவு செய்வோரை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக, புதிய வழிமுறைகளை பதிவுத்துறை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள், மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது என, சார் -- பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, பதிவுத்துறை தலைவர் விரிவான வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். ஆனாலும், பெரும்பாலான பகுதிகளில், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்வதாக புகார்கள் வந்துள்ளன.
இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், விதிகளை மீறும் சார் - பதிவாளர்களுக்கு, துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கீகாரமில்லாத மனைகள் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில சார் - பதிவாளர்கள் விதிகளை மீறுகின்றனர்.
குறிப்பாக, 20 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை, விவசாய நிலமாகவே பதிவு செய்ய தடை இல்லை. ஆனால், 20 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை பதிவு செய்யும் போது, வீட்டு மனையாக மாற்றி பதிவு செய்யப்படுகிறது.
அதற்கு முன், அதன் தற்போதைய நிலவரம் என்ன என்று பார்க்க வேண்டும்.
ஒரே நபர் அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயரில், அடுத்தடுத்த நிலம் வாங்கப்படும் நிலையில், கூடுதல் கண்காணிப்பு தேவை. பல இடங்களில் பண்ணை வீடு கட்டி விற்கும் நோக்கத்தில், 20 சென்ட் அளவில் விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விவசாய நிலத்துக்கான மதிப்பில் இவை விற்கப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்க, சார் - பதிவாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தவறு செய்யும் சார் - பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.