அடுத்த தலைமுறை 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' தான்: ஐ.ஐ.டி., இயக்குனர் தகவல்
அடுத்த தலைமுறை 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' தான்: ஐ.ஐ.டி., இயக்குனர் தகவல்
ADDED : ஆக 27, 2024 04:51 AM

சென்னை: ''அடுத்த தலைமுறை, 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' தான். இதற்கான தொழில்நுட்ப ஹார்டுவேர்கள் ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்படும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மையத்தில், 'குவாண்டம் மிஷன்' குறித்த சர்வதேச கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது:
அடுத்த தலைமுறை கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி தான், குவாண்டம் கம்ப்யூட்டிங். இது, குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. குவாண்டம் கோட்பாடு அணு மற்றும் துணை அணு மட்டங்களில் ஆற்றல் மற்றும் பொருளின் நடத்தையை விளக்குகிறது. சர்வதேச அளவில் இதற்கான முயற்சி, பல நாடுகளில் நடக்கிறது.
நாம் தற்போது பயன்படுத்தும், 'கிளாசிக்' வகை கம்ப்யூட்டர்கள் 0, 1 என்ற பைனரி எண்களை கட்டளையாக கொண்டு செயல்படுகின்றன. கிளாசிக் வகை கம்ப்யூட்டர்களை விட வேகமாக செயல்படும் ஆற்றல் உடையதாக, குவாண்டம் கம்ப்யூட்டிங் இருக்கும்.
குவாண்டம் கோட்பாட்டின் பயன்பாடு கணினிகள், அவற்றின் பைனரி குறியீட்டிற்கு அப்பால் செயல்படுவதை உறுதி செய்யும். இவற்றால், 0, 1 பைனரி எண்களுக்கு இடைப்பட்ட கட்டளைகளை ஏற்க முடியும். தற்போது வளர்ந்து வரும் ஏ.ஐ., என்ற, 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பம், எதிர்காலத்தில் குவாண்டம் கம்ப்யூட்டரை மையமாக வைத்து செயல்பட உள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப வளர்ச்சி ஓரளவிற்கு பயன்பாட்டிற்கு வர, இன்னும் ஐந்தாண்டுகள் ஆகலாம். குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திற்கான 'ஹார்டுவேர்' பொருட்கள் தயாரிப்பது மிகவும் சவாலாக உள்ளது. துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு குவாண்டம் சென்ஸ் என்ற டெக்னாலஜியை பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, 'சென்சிங்' தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கி இருக்கிறோம்.
இதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை அடித்தளமாக அமையும். கிளாசிக் கம்ப்யூட்டர்கள் மூலமாக வங்கி பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்துகிறோம். ஆனால், மற்றொரு கிளாசிக் கம்ப்யூட்டரை வைத்து, அந்த பாதுகாப்பு அம்சத்தை உடைத்து விட முடியும்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தினால், அதை உடைப்பது கடினமாக இருக்கும். தொலை தொடர்பிலும், துல்லியமான முன்னறிவிப்பு இருக்கும். குவாண்டம் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியை பயன்படுத்தி ஐ.ஐ.டி.,யில் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தேசிய குவாண்டம் மிஷன் தலைவர் அஜய் சவுத்ரி, பேராசிரியர்கள் ரகுரங்கசாமி, மேடிஅடாடர் மற்றும் ஆராய்ச்சி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.