ADDED : ஆக 20, 2024 01:50 AM

பா.ஜ.,வில், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அது தொடர்பான கூட்டம் டில்லியில் நடந்தது. அதில், புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'மிஸ்டு கால்' வாயிலாக, புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிகழ்ச்சியை, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக, 88000 02024 என்ற எண்ணை, டில்லி மேலிடம் தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தில் தற்போது, 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தி.மு.க.,வில் 2 கோடி உறுப்பினர்களும், அ.தி.மு.க.,வில் 2 கோடியே, 14 லட்சம் உறுப்பினர்களும் உள்ளதாக, அக்கட்சிகள் கூறுகின்றன.
அதேபோல், தமிழக பா.ஜ., சார்பில் ஒன்றரை கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஓட்டு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில், உறுப்பினர்கள் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி வருவதால் பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதனால், உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டுமாறு, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என்றார்
- நமது நிருபர் -.