நான் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வேலை பார்க்கலை: மா.செ.,க்களிடம் கோபம் காட்டிய பழனிசாமி
நான் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வேலை பார்க்கலை: மா.செ.,க்களிடம் கோபம் காட்டிய பழனிசாமி
UPDATED : ஏப் 24, 2024 01:36 PM
ADDED : ஏப் 23, 2024 11:39 PM

சென்னை: 'லோக்சபா தேர்தலில், குறைந்தது 10 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெறும்' என, நம்பிக்கை தெரிவித்த அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி, சரியாக செயல்படாத மாவட்ட செயலர்களிடம், 'நான் எதிர்பார்த்த அளவு நீங்கள் பணியாற்றவில்லை' என, கண்டித்து உள்ளார்.
சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலர்கள், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
பழனிசாமி பேசுகையில், ''அரசுக்கு போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில், நமக்கு 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். நமக்கு நல்ல வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
பின் ஒவ்வொருவரிடமும் தேர்தல் பணி எப்படி இருந்தது, கள நிலவரம் என்ன, நம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவில் உள்ளது எனக் கேட்டறிந்தார்.
அரவணைத்து செல்லுங்கள்
ஜெயகுமார் பேசுகையில், ''கட்சியில் புதிதாக சேருபவர்களுக்கு, மாநில அளவில் பொறுப்பு வழங்குகிறீர்கள். இது பழைய நபர்களிடம் விரக்தியை ஏற்படுத்துகிறது,'' என்றார். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, ''பழைய ஆட்கள் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.
அதேநேரம் மாவட்ட செயலர்களிடம், ''நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பொறுப்பு வழங்காமல், பழைய நபர்கள், புதிய நபர்கள் என, அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி, அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்,'' என, அறிவுரை வழங்கினார்.
'சிறுபான்மையினர் ஓட்டுகள் நாம் எதிர்பார்த்த அளவு வரவில்லை. அவர்கள் வழக்கம்போல், தி.மு.க., கூட்டணிக்குஆதரவளித்துள்ளனர்' எனக் கூறியதை, பழனிசாமி அமைதியாக கேட்டுக் கொண்டார்.
மத்திய சென்னையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, தே.மு.தி.க., சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்களிடம் பழனிசாமி விசாரித்தார்.
அவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக கூறியதை கேட்டு, பழனிசாமி கோபம் அடைந்தார். ''நீங்கள் சிறப்பாக பணியாற்றி இருந்தால், ஓட்டுப்பதிவு சதவீதம் ஏன் குறைந்தது? வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு, விலைவாசி உயர்வு என, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
''நீங்கள் சிறப்பாக பணியாற்றி இருந்தால், அவர்கள் ஓட்டளிக்க வந்திருப்பர். அதிருப்தியில் உள்ள மக்கள் ஓட்டளிக்க வராததற்கு காரணம், நீங்கள் சரியாக பணியாற்றவில்லை. நான் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் பணியாற்றவில்லை,'' என்று கடிந்து கொண்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சசிகலா திட்டம் எடுபடாது
கட்சித் தொண்டர்களுக்கு சசிகலா அனுப்பியுள்ள கடிதம் மற்றும் படிவங்கள் குறித்து, மா.செ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆலோசித்தார்.
அது தொடர்பாக, நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பல தொகுதிகளில், பா.ஜ., ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டு இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பலரும், தேர்தல் கமிஷன் மற்றும் தி.மு.க., அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது குறித்து, பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் கேட்டனர்.
அப்போது, 'இந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது?' என நிர்வாகிகளிடம் கேட்டார். 'ஒரு சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பது உண்மை தான். ஆனால், பா.ஜ.,வினர் சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் இல்லை' என்றனர்.
அதையடுத்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது குறித்து விவாதிக்கப்பட்டது.'இந்த விஷயத்தில், நம் கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்னமும் நாம் பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டோடு செயல்படுவதாகவே மக்கள் எடுத்து கொள்வர்' என நிர்வாகிகள் பலரும் கூறினர்.
அதை ஏற்ற பழனிசாமி, உடனடியாக மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
பின், அரசியலில் அமைதி காத்த சசிகலா, தேர்தலுக்கு பின் திடீரென வேகம் காட்டுவது பற்றியும், 15 கேள்விகளுக்கு பதில் கேட்டு, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் அனுப்பி வருவது குறித்தும் பேசினர்.
ஏற்கனவே, 'தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., தினகரன் கைக்கு வரும் என, அண்ணாமலை பேசுகிறார். பா.ஜ., துாண்டுதலோடு, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் செயல்கின்றனர்.
'அ.தி.மு.க.,வில் குழப்பம் விளைவிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக சசிகலா, விபரம் திரட்டுவது போல் தெரிகிறது. அதனால், இந்த விஷயத்தை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்' என, நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதற்கு பழனிசாமி, 'இந்த விஷயத்தில் ஆளாளுக்கு எதுவும் கருத்து கூறி, எதிராளிகளையும், துரோகிகளையும் பெரிய மனிதர் ஆக்காதீர்கள்.'அதை எப்படி முறியடிக்க வேண்டுமோ, அதை நானே பார்த்துக் கொள்கிறேன். அதற்கான முயற்சிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. யாருடைய சதி திட்டமும் இனி எடுபடாது' என, திட்டவட்டமாக கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.

