sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அமோனியா வாயு கசிந்த ஆலையை திறக்கலாம்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் எண்ணுாரில் அதிருப்தி

/

அமோனியா வாயு கசிந்த ஆலையை திறக்கலாம்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் எண்ணுாரில் அதிருப்தி

அமோனியா வாயு கசிந்த ஆலையை திறக்கலாம்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் எண்ணுாரில் அதிருப்தி

அமோனியா வாயு கசிந்த ஆலையை திறக்கலாம்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் எண்ணுாரில் அதிருப்தி

4


UPDATED : மே 22, 2024 10:26 AM

ADDED : மே 21, 2024 11:48 PM

Google News

UPDATED : மே 22, 2024 10:26 AM ADDED : மே 21, 2024 11:48 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தி, உரிய அனுமதிகள் பெற்று, எண்ணுார் கோரமண்டல் உர ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்கலாம்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

இத்தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள எண்ணுார் மக்கள், 'ஆலையை திறந்தால் மீண்டும் பெரிய அளவில் ஆபத்து நேரிடலாம்' என பீதியடைந்துள்ளனர்.

சென்னை, எண்ணுார் அடுத்த பெரியகுப்பத்தில் முருகப்பா குழுமத்திற்கு சொந்தமான 'கோரமண்டல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற உரத்தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உரம் தயாரிக்க தேவையான அமோனியா, துபாயில் இருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு, கடலில் புதைக்கப்பட்டுள்ள 3 கி.மீ., துார குழாய் வாயிலாக, ஆலைக்கு செல்கிறது. அங்கு, 12,000 டன் கொள்ளளவு உடைய இரண்டடுக்கு தொட்டியில் சேமிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2023, டிச., 26ம் தேதி நள்ளிரவு 11:30 மணிக்கு, கடலில் புதைக்கப்பட்ட குழாயில், குளிர்வித்தல் மற்றும் சீரமைக்கும் பணி நடந்தது.

'மிக்ஜாம்' புயல், மழையின்போது, இந்த குழாயில் துளை ஏற்பட்டிருந்ததை கவனிக்காமல் சீரமைப்பு பணி மேற்கொண்டதால், அதன் வழியே அமோனியா வாயு கசிந்தது. இதனால், பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர்குப்பம், இந்திரா காந்தி குப்பம், பர்மா நகர், சத்தியவாணி முத்து நகர் உட்பட 33 மீனவ கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் பீதியடைந்த மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என, வாகனங்களில் ஏறி, எண்ணுாரில் இருந்து வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த பாதிப்பு காரணமாக, 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, நிறுவனத்தின் பிரதான வாயில், ஊழியர்கள் செல்லும் வாயில் முன், போராட்டம் நடத்தினர். 33 மீனவ கிராம மக்களும் ஆங்காங்கே இப்போராட்டத்தை நடத்தினர்.

மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியது. உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, 82 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

இதற்கிடையே, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

குழாய் தான் காரணம்


தொடர்ந்து, வாயு கசிவு குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., - மாசு கட்டுப்பாடு வாரியம், சி.பி.சி.எல்., உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்தது. இதையடுத்து, ஐந்து மாதங்களாக விசாரணை நடந்தது.

அப்போது, மீனவர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், உரத்தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தப்பினர் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா எடுத்து சென்றதே வாயு கசிவிற்கு காரணம் என்பது தெரியவந்தது. அதை மாற்ற வேண்டும். ஆலையில் உள்ள அலாரம் உள்ளிட்ட உபகரணங்களையும் மாற்ற வேண்டும் என கூறப்பட்டது.

அதே சமயம், மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைகளை செயல்படுத்த தயாராக இருப்பதாக, ஆலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, அமோனியா வாயு கசிவு நடந்த இடம் உட்பட, கோரமண்டல் தொழிற்சாலை முழுவதையும் ஆய்வு செய்து, பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கோரமண்டல் உர தொழிற்சாலையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீண்டும் அமோனியா வாயு கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, மூன்று முக்கியமான பரிந்துரைகளை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.

தவிர, தொழிற்சாலை நிறுவனம் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கும்.

இந்த பரிந்துரைகளை கடைப்பிடித்து, உரிய அனுமதிகள் பெற்று, கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனை


பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவிற்கு, எண்ணுார் உட்பட சுற்றுப்புற பகுதியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கடலில் புதைக்கப்பட்ட குழாயை முழுதாக மாற்றாமல், மீண்டும் ஆலையை திறந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் என, அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

நேரடியாக 850 தொழிலாளர்களும், மறைமுகமாக 2,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், இந்த ஆலையில் பணிபுரிகின்றனர். 'ஆலையை நம்பியே வாழ்வாதாரமாக உள்ளது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்' எனக்கூறி, அத்தொழிலாளர்கள், சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

கண்துடைப்பு

தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது காற்றில் அமோனியா வாயு கலக்காத வகையில், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும். விஷத்தன்மை காற்றில் கலக்காத வகையில், நீண்ட புகை போக்கிகளை உருவாக்க வேண்டும். தற்போது வந்துள்ள தீர்ப்பு கண்துடைப்பு நாடகம்.

- இ. பிரபாகரன், 54,

எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்

போராட்டம் தொடரும்

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு ஏற்புடையது இல்லை. அமோனியா விஷவாயு கசிவு குறித்து, பாதிக்கப்பட்ட மக்களிடம்கூட, இந்த அரசு கருத்து கேட்கவில்லை. 'கடலில் புதைக்கப்பட்டுள்ள குழாயை முழுமையாக மாற்ற வேண்டும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. அதை, ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. இந்த நிலையில், ஆலையை திறந்தால், மீண்டும் விபத்திற்கே வழிவகுக்கும்.

- கே. பார்த்தசாரதி, 42,

தாழங்குப்பம்.

ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை

வாயு கசிவு குறித்து, எண்ணுார், காமராஜ் நகர் ஏ.கவுஸ்பாஷா, 49, கூறியதாவது:

அரசு வழிமுறைகள் பின்பற்றி, தடையில்லா சான்று பெற்றாலும், உர தொழிற்சாலையை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கும் வகையில், அனைத்து இடங்களிலும் தானியங்கி அலாரம் கருவிகளை பொருத்த வேண்டும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழில் துறை, மீன்வளத் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதுபோன்ற பரிந்துரைகளை செய்து முடிக்க ஓராண்டுக்கு மேலாகும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால், தொழிற்சாலையை முழுதாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான கால அவசாகம் இப்போது இல்லை. எனவே, தொழிற்சாலையை திறக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us