மீட்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., இடத்தில் ரூ.48 லட்சத்தில் பூங்கா
மீட்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., இடத்தில் ரூ.48 லட்சத்தில் பூங்கா
UPDATED : செப் 04, 2024 06:30 AM
ADDED : செப் 04, 2024 01:42 AM

ஆலந்துார் மண்டலம், சாஸ்திரி பவன் அலுவலர்கள் 59 பேர் இணைந்து, வீட்டு வசதி மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினர். அச்சங்கத்தின் சார்பில், 1979ல் ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகரில் சர்வே எண்: 274/1, 2ல் 5.4 ஏக்கர் நிலம் வாங்கினர்.
இந்நிலத்தில் வீட்டுமனை போக எஞ்சிய இடம், ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டிற்காக 19,000 சதுர அடி, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும், அதற்கு பட்டா உள்ளதாகவும் சிலர் உரிமை கொண்டாடி, அந்த இடத்தை கபளீகரம் செய்ய முயன்றனர்.
![]() |
இதுகுறித்து, நம் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. அதன் நடவடிக்கையாக அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
ஆதம்பாக்கம், திருவள்ளூவர் நகரில் ஓ.எஸ்.ஆர்., எனும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலம், சில போலி பட்டா வாயிலாக ஆக்கிரமிக்க முயல்வதாக புகார் எழுந்தது. தாசில்தார் ஆய்வுக்கு பின், சம்பந்தப்பட்ட இடம் மீட்கப்பட்டது.
தற்போது, அந்த இடத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மீட்கப்பட்ட, 11,000 சதுர அடி நிலத்தை சமப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, அதற்கான பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் --