டில்லி சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயார்!:மும்முனை போட்டியால் சூடுபிடித்துள்ள களம்
டில்லி சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயார்!:மும்முனை போட்டியால் சூடுபிடித்துள்ள களம்
UPDATED : செப் 01, 2024 12:43 AM
ADDED : ஆக 31, 2024 11:39 PM

டில்லி சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே களமிறங்கியுள்ளன. மும்முனை போட்டி நிலவுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. மொத்தம், 70 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது.
கட்சித் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும் அவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
ஜாமின்
ஏற்கனவே, இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
அதுபோல, இந்த வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கும் சமீபத்தில் ஜாமின் கிடைத்தது.
இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வரும் வாரத்தில் ஜாமின் கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் கட்சி உள்ளது.
இதற்கிடையே, ஜாமினில் வந்துள்ள மணீஷ் சிசோடியா, கட்சி தொடர்பான பல நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2015 தேர்தலில், 70ல் 67 இடங்களிலும், 2020ல் 62 இடங்களையும் ஆம் ஆத்மி வென்றது. அதுபோல தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆனால், டில்லியில் உள்ள ஏழு இடங்களையும் பா.ஜ., வென்றது.
முதல்வர் வேட்பாளர்
இதையடுத்து, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்., அறிவித்துள்ளன. ஏற்கனவே அரசியல் ரீதியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் வருகைக்குப் பின், வரும் வாரத்தில் மேலும் அது சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வும், தன் அரசியல் நடவடிக்கைகளை டில்லியில் துவக்கியுள்ளது. கடந்த 2015 தேர்தலின்போது, முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கிய பா.ஜ., பெரும் தோல்வியைத் தழுவியது.
கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்காமலேயே களமிறங்கியும் தோல்வி அடைந்தது.
இதனால், இந்த முறை நன்கு பிரபலமான, மக்களிடையே பரிச்சயமான ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க கட்சியின் டில்லி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனோஜ் திவாரி, பன்சூரி சுவராஜ் போன்றவர்களை முன்னிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த யோசனையை கட்சித் தலைமை இன்னும் ஏற்கவில்லை. வரும் வாரங்களில், இதில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் தன் அரசியல் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.,வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் காங்கிரசில் இணைந்தனர். தங்களின் முந்தைய, 15 ஆண்டு கால ஆட்சியை முன்னிறுத்தி காங்., பிரசாரம் செய்ய உள்ளது.
இவ்வாறு மூன்று முக்கிய கட்சிகளும் அரசியல் நடவடிக்கைகளை துவக்கியுள்ளதால், டில்லி தேர்தல் களம் தற்போதே சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.