விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் 'சிக்கல்'
விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் 'சிக்கல்'
ADDED : செப் 02, 2024 07:03 AM

விஜய் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தேர்வு செய்துள்ள இடம் பாதுகாப்பில்லாதது என கூறி, போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றத்தை நாட அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு, 85 ஏக்கர் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த பைபாசில் கிழக்கு பகுதியில் 40 ஏக்கர், தென் மாவட்ட வாகனங்கள் நிறுத்த மேற்கு புறத்தில் 28 ஏக்கர் இடம் தனியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தில் சினிமா கலைஞர்களால் மேடை அரங்கம், நுழைவு வாயில் சினிமாவை மிஞ்சும் வகையில் நவீனமாக அமைக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ரயில்வே பாதையொட்டி மாநாடு இடம் அமைந்துள்ளதால் ரயில் பாதையை யாரும் கடக்காத வகையில் 10அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தின் மேலே செல்லும் மின் கம்பிகள் மின்வாரிய அனுமதியுடன் அகற்றுவது. மாநாடு முடியும் வரை நிலத்தை தோண்டி கேபிள் மூலம் மின் சப்ளை செய்வது. இப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்தும் , தண்ணீர் இல்லாத கிணற்றை மண்கொட்டி மூடவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளை கட்சியினர் துவக்கியுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கடந்த 28ம் தேதி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், மாநாட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.
அந்த மனுவில், மாநாட்டிற்கு 1.50 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 85 ஏக்கர் இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம். வாகன நிறுத்த இடம் மற்றும் தொண்டர்கள் வந்து செல்வதற்கு தலா 3 வழிகள், உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளது. மாநாட்டுக்காக, காவல்துறை வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் முறையாக நடத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
எஸ்.பி., தீபக்சிவாச் விடுமுறையில் உள்ளதால், அந்த மனுவை பெற்ற கூடுதல் எஸ்.பி., திருமால், அன்றைய தினமே காவல்துறை அதிகாரிகளுடன், வி.சாலை பகுதிக்கு சென்று, மாநாடு நடத்த தேர்வு செய்துள்ள இடத்தை ஒரு மணி நேரம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கைவிரிப்பு
மாநாட்டிற்கு விஜய் தரப்பில் தீவிர ஏற்பாடுகளை தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் குறிப்பிட்டுள்ள இடம், மாநாடு நடத்துவதற்கு உரிய பாதுகாப்புடன் கூடிய இடமில்லை என அதிகாரிகள் தரப்பில் கைவிரித்துள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மாநாடு நடத்த 85 ஏக்கர் பரவலான இடம் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திருச்சி ரயில் பாதை ஆகியவை ஒட்டியுள்ள குறுகிய இடமாக உள்ளது. நடிகர் என்பதாலும், புதிய கட்சி தொடக்கம் என்பதாலும், அவர்களது ஆதரவாளர்களுடன், பிற பொது மக்களும் என தமிழகம் முழுவதிலிருந்தும் 2 லட்சம் பேர் வர வாய்ப்புள்ளது.
இவர்கள் நான்கு வழிச்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றால், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதே இடத்தில், முதல்வர் ஸ்டாலின் தலமையில் விழுப்புரம், ஆரணி, கடலுார் லோக்சபா தொகுதிக்கான பிரசார கூட்டம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
முதல்வர் மட்டும் பேசினார். 1 மணி நேரம் நடந்த அந்த கூட்டத்திற்கு 30 ஆயிரம் பேர் வந்தனர். அதற்கே 4 மணி நேரம் போக்குவரத்து நெரிசலும், தேசிய நெடுஞ்சாலையும் ஸ்தம்பித்தது.
இப்போது நடிகரின் புதிய கட்சி மாநாட்டுக்கு, தமிழகம், அருகே புதுச்சேரி பகுதியிலிருந்து கூட்டம் மிகுதியாக வரும். அதனை குறுகிய இடத்தில் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அதே போல், அவர்கள் நெடுஞ்சாலையின் இடதுபுறம், வலது புறம் என 3, 4 இடங்களை பரவலாகவே தேர்வு செய்துள்ளனர்.
இதனால் தொண்டர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மாநாடு நடந்து முடியும் வரை, சாலையை கடப்பதுமாக இருப்பார்கள் என்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும்.
மாநாட்டுக்கு தேர்வான இடங்களில் திறந்த வெளி விவசாய கிணறுகள் ஏராளமாக உள்ளன. அதில் விபத்து நடக்கலாம். அருகே ரயில்பாதையும் செல்வதால், பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். இதனையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், பரவலாக இடம் கிடைத்துவிட்டது என விடாப்பிடியாக அனுமதி கேட்கின்றனர்.
இதுகுறித்து, காவல்துறை தலைமைக்கு தகவல் அளித்துள்ளோம். அரசு தரப்பும், காவல் உயரதிகாரிகளும் தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இப்போதுள்ள அரசியல் சூழலில், ஆளும் தி.மு.க., தரப்பின் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய் கட்சி தொடங்குவதை விரும்பாமல் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இதனால், இந்த நெருக்கடியான இடத்தில், மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பது சந்தேகம் என அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்தாலும், உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று பிரமாண்டமாய் கட்சி மாநாட்டைநடத்த தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது.
-நமது நிருபர்-