தவறான தகவலளித்த பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'; ரணத்தில் வேல் பாய்ச்சுவதாக உதய்க்கு எதிர்ப்பு
தவறான தகவலளித்த பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'; ரணத்தில் வேல் பாய்ச்சுவதாக உதய்க்கு எதிர்ப்பு
ADDED : செப் 12, 2024 03:47 AM

சிவகங்கை: மதுரையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் உதயநிதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கியது, சிலரை சஸ்பெண்ட் செய்திருப்பதெல்லாம், 'ரணத்தில் வேலை பாய்ச்சியுள்ளது போல இருக்கிறது' என, தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர், உதயநிதிக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.
இதற்கிடையில், அமைச்சர் உதயநிதி ஆய்வு கூட்டத்தில் தவறான தகவல் தந்ததாக திருப்புத்துார் பி.டி.ஓ., வி.சோமதாசை, கலெக்டர் ஆஷா அஜித் 'சஸ்பெண்ட்' செய்தார்.
சிவகங்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், செப்., 10ல் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
அதிருப்தி
அமைச்சர் உதயநிதி, துறை வாரியாக 'முதல்வரின் முகவரி' திட்டத்தில் வந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் விசாரணை செய்தார்.
அப்போது, திருப்புத்துாரில் முட்புதர்களை அகற்றாததால், விஷப் பூச்சிகள் வருவதாக அளித்த புகாரின்படி, எந்தவித நடவடிக்கையையும் திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வி.சோமதாஸ் எடுக்கவில்லை.
ஆனால், ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கேட்டபோது, நடவடிக்கை எடுத்ததாக தவறான தகவல் கொடுத்துள்ளார்.
ஆய்வு கூட்டத்திலேயே மனுதாரரின் மொபைல் போனுக்கு அழைத்து பேசிய உதயநிதி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்ததும் அதிருப்தியானார்.
இதையடுத்து, ஆய்வு கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக பி.டி.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
செப்., 10ல் நடந்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் உண்மை தன்மையை அறிய, அதிகாரிகள் செப்., 9ல் கல்லல் ஒன்றியத்தில் ஆய்வு செய்தனர்.
அன்று காலை 9:30 மணிக்கு மேல், கல்லல் இந்திரா நகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள், உதவியாளர் மாலதி, கே.வைரவன்பட்டி அங்கன்வாடி மைய உதவியாளர் ரேணுகாதேவி ஆகியோர் காலதாமதமாக வந்ததாக, அமைச்சர் உதயநிதி நடத்திய ஆய்வு கூட்டத்தில் அறிக்கை அளித்தனர்.
பணியிட மாற்றம்
இதன் தொடர்ச்சியாக, கல்லல் இந்திரா நகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள், காந்திநகர் காலனிக்கும்; உதவியாளர் மாலதி ஆலங்குடிக்கும்; கே.வைரவன்பட்டி உதவியாளர் ரேணுகாதேவி, உடையநாதபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

