போதை பொருள் விவகாரத்தில் மாணவர்களை குறிவைக்கும் ரவுடிகள்: கட்டுப்படுத்துவது சவாலானது என்கிறது போலீஸ்
போதை பொருள் விவகாரத்தில் மாணவர்களை குறிவைக்கும் ரவுடிகள்: கட்டுப்படுத்துவது சவாலானது என்கிறது போலீஸ்
ADDED : செப் 02, 2024 01:45 AM

சென்னை: தமிழகத்தில் போதை பொருட்கள் விவகாரத்தில், உள்ளூர் ரவுடிகள் பிடியில் மாணவர்கள் சிக்குவதால், கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாகவும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்து படிக்கின்றனர். அந்த மாணவர்கள், பெற்றோரிடம் கல்லுாரி விடுதியில் தங்குவதாக கூறிவிட்டு, சுற்றியுள்ள குடியிருப்புகளில் தங்குகின்றனர்.
சோதனை
இந்த மாணவர்களை குறிவைத்து, உள்ளூர் ரவுடிகள் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள், கஞ்சா, ஹோக் பவுடர் உள்ளிட்ட போதை பொருட்களை, மாணவர்களிடம் விற்பனை செய்கின்றனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கல்லுாரிகளில், வெளிமாநில மாணவர்கள் வாயிலாக, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து, பள்ளி, கல்லுாரிகளில் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றச் செயலில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சாவலானதாக உள்ளது.
உள்ளூர் ரவுடிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை, போதை பொருட்கள் விற்பனையாளராக மாற்றுகின்றனர்.
முதலில், அவர்களை கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையாக்கி, இவற்றை பணக்கார மாணவர்களுக்கு விற்பனை செய்து தந்தால், அதிக பணம் உனக்கு கிடைக்கும் என மூளைச்சலவை செய்து, அவர்களை விற்பனையில் ஈடுபட வைக்கின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்யும் மாணவர்கள் குறித்து, சக மாணவர்களுக்கு தெரிந்தாலும், அவர்கள் யாரும் காட்டிக் கொடுக்க முன்வருவதில்லை.
இந்த போதை பொருட்கள், மாணவர்களுக்கு பிடித்தமான சாக்லேட், புகையிலை, பவுடர் உள்ளிட்ட வகைகளில் கிடைப்பதால், அதற்கு எளிதில் மாணவர்கள் அடிமையாகி விடுகின்றனர்.
மாணவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லுாரிகளில் தான் உள்ளனர். அவர்களின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தால், போலீசாருக்கு தெரியப்படுத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், ஆசிரியர்களை காட்டிலும் பெற்றோருக்கு தான் அதிக அக்கறை உள்ளது.
கண்காணிப்பு
எனவே, தங்களது பிள்ளை களின் செயல்பாட்டில் மாற்றம் உள்ளதா என்பதை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களது ஆடைகள், அறைகள், உடைமைகளை அவர்களுக்கே தெரியாத வகையில் சோதனை செய்வதுடன், தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.
வெளிச்சந்தையில் போதை பொருட்களை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், வாகனங்கள் வாயிலாக, வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த, எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பள்ளி, கல்லுாரிகள் அதன் அருகாமை குடியிருப்புகளில், ஒரே நேரத்தில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.