கோவை மாவட்ட மக்களுக்கு இ-பாஸில் விலக்கு தர கோரிக்கை
கோவை மாவட்ட மக்களுக்கு இ-பாஸில் விலக்கு தர கோரிக்கை
UPDATED : மே 01, 2024 04:12 AM
ADDED : மே 01, 2024 01:17 AM

நீலகிரி மக்கள் பெருமளவில் வசிப்பதால், நீலகிரிக்குச் செல்வதற்கு கோவை மாவட்ட மக்களுக்கு இ -- பாஸ் நடைமுறையில் விதிவிலக்கு தர வேண்டுமென்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடை சீசன் துவங்கி விட்டதால், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து, தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசு உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஊட்டிக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
![]() |
வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை, இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும், இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டுமென்றும், ஐகோர்ட் அறிவுறுத்திஉள்ளது.
அதேபோல, நீலகிரியின் தாய் மாவட்டமான கோவை மாவட்டம், இயற்கை மற்றும் சமுதாய ரீதியாக நீலகிரியுடன் இணைந்த பகுதியாக இருப்பதால், அங்குள்ள மக்களுக்கும் இதில் விலக்களிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு உருவாகிஉள்ளது.
இதற்கான அவசியமும் மிக அதிகமாகவுள்ளது.
ஏனெனில் நீலகிரியைப் பூர்விகமாகக் கொண்ட மக்கள் பெரும்பாலானோர், கோவை மாவட்டத்தில் தான் வாழ்கின்றனர். கல்வி, வேலை, தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற காரணங்களுக்காகவும், உடல் நலம், மருத்துவ தேவைகளுக்காகவும், கோவையில் வசிப்பவர்கள் ஏராளம்.
அதேபோல, கோவையைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நீலகிரியில் விவசாயம், தொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே, தினமும் அல்லது வாரத்தில் பல நாட்களுக்கு, கோவையிலிருந்து நீலகிரி சென்று வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அது மட்டுமின்றி, விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கும், கோவையை மட்டுமே நீலகிரி மக்கள் நம்பியிருப்பதால், இவ்விரு மாவட்டங்களுக்குமான பயணங்களில், கட்டுப்பாடுகளை விதிப்பது, நடைமுறையிலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இ - பாஸ் முறையை நடைமுறைப்படுத்தினாலும், நீலகிரி மக்களுக்கு அதிலிருந்து விலக்களிப்பது போல, கோவை மாவட்ட மக்களுக்கும் விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஐகோர்ட்டில் இதைத் தெளிவுபடுத்தி, அதற்கேற்ப இ- பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது, தமிழக அரசின் பொறுப்பாகும்.
- நமது நிருபர் -