வட மாநில தொழிலாளர்கள் திரும்பலை: தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
வட மாநில தொழிலாளர்கள் திரும்பலை: தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
UPDATED : மே 24, 2024 05:31 AM
ADDED : மே 24, 2024 01:10 AM

கோவை: ஓட்டு செலுத்துவதற்காக வடமாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள், மீண்டும் கோவைக்கு திரும்பாததால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதித்துள்ளது.
கோவையில் இன்ஜினியரிங் நிறுவனங்கள், மில்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், கட்டட கட்டுமானத்துறை உட்பட பெரும்பான்மையான துறைகளில் மத்தியபிரதேசம், அசாம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பல ஆண்டுகளாக பணிபுரியும் இவர்கள் ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் கோவைக்கு திரும்பவில்லை. தமிழகத்தில் அத்தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போலவே, அவர்களது சொந்த மாநிலத்திலேயே வழங்க அம்மாநில அரசுகள் முன் வந்துள்ளன. அதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்கள் கோவைக்கு திரும்பாததால் கோவையில் உள்ள பவுண்டரிகள், மோட்டார் பம்ப் தயாரிப்பு, உணவகங்கள், ஜவுளிஇயந்திரங்கள், கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் சுணக்கமடைந்துள்ளன.
தமிழ்நாடு ஓப்பன் எண்ட் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: வட மாநிலங்களில் உள்ள தொழில்துறையினர் தற்போது ஓப்பன் எண்ட் மில் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனால் அங்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாம் வழங்கும் சம்பளத்தையே அவர்களும் வழங்குகின்றனர்.
வடமாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் அவர்கள் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதோடு தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: வடமாநில தொழிலாளர்கள் தான் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலின் முதுகெலும்பாக இருந்தனர். ஓட்டுப்போட சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னும் திரும்பவில்லை. இதனால் உற்பத்திப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமான உற்பத்தியை கொடுப்பதற்கு வடமாநில தொழிலாளர்கள் அவசியம். அதற்கு தமிழக அரசு அவர்களுக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.