sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆந்திர மிளகாய் வற்றலால் புற்று நோய் ஆபத்து

/

ஆந்திர மிளகாய் வற்றலால் புற்று நோய் ஆபத்து

ஆந்திர மிளகாய் வற்றலால் புற்று நோய் ஆபத்து

ஆந்திர மிளகாய் வற்றலால் புற்று நோய் ஆபத்து


ADDED : ஜூலை 01, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமையலில் நிறம் மற்றும் காரத் தன்மைக்காக மக்கள் பயன்படுத்தும் ஆந்திர நீட்டு மிளகாய் வற்றல் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொடி வகைகளால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆபத்தை உணராமல் மக்கள் அவற்றை பயன்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், எத்தியோப்பியா உட்பட பல்வேறு நாடுகளில் மிளகாய் சாகுபடி நடக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.37 லட்சம் டன் மிளகாய் உற்பத்தியாகிறது; உள்நாட்டு தேவைக்கு போக பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. நம் நாட்டில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிளகாய் உற்பத்தி அதிகமாக நடக்கிறது.

அதேநேரத்தில், நாட்டின் ஒட்டு மொத்த மிளகாய் உற்பத்தியில் ஆந்திராவில் 44 சதவீதமும், தெலுங்கானாவில் 12 சதவீதமும் விளைகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகள் மூன்று பருவங்களாக மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டூர் சந்தை

ஆந்திராவின் குண்டூர் சந்தை தான், ஆசியாவிலேயே மிகப்பெரிய மிளகாய் வற்றல் சந்தையாக திகழ்கிறது. இங்கிருந்து தான், மிளகாய் வற்றலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நடவு செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் இருந்து 75 நாட்களிலும், விதைப்பு செய்யப்பட்ட செடிகளில் இருந்து 105 நாட்களிலும் மிளகாய் அறுவடை செய்யலாம். மற்ற பயிர்களை காட்டிலும் மிளகாய் பயிர்களை பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. எனவே, நடவு முதல் அறுவடை வரை, நான்கு முறைக்கு மேல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அளிப்பதற்காக யூரியா கரைசல் தெளிக்கப்படுகிறது.

இலைப்பேன், காய் துளைப்பான், தேமல் நோய், பழ அழுகல் நோய், சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், நாற்றழுகல் நோய், மஞ்சள் சிலந்திகள் ஆகியவற்றால் மிளகாய் பயிர்கள் பாதிப்பை சந்திக்கின்றன; பூக்கள் மற்றும் பிஞ்சுகளும் உதிர்கின்றன.

எனவே, நடவு முதல் அறுவடை வரை பல்வேறு காலகட்டங்களில், 'குளோரிபைரிபாஸ், குயிலான் பாஸ், டைமித்தோயேட், மீத்தைல் டெமட்டான், டைக்கோபாஸ், எத்தியான், மேங்கோசெப், தாமிர ஆக்சிகுளோரைடு, கார்பென்டாசிம்' உள்ளிட்ட பல பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

பூச்சிகளை அழிப்பதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும், தடை செய்யப்பட்ட அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை, மிளகாய் சாகுபடிக்கு பயன்படுத்துவது ஆந்திராவில் அதிகரித்துள்ளது.

அறுவடை செய்யப்பட்ட மிளகாய் காய்ந்து வற்றலான பின், அவற்றின் வண்ணத்தை கூட்டுவதற்கும், பொலிவிற்காகவும் சில ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காய்ந்த மிளகாய் எனப்படும் மிளகாய் வற்றல்களில், பூச்சிக்கொல்லியின் பாதிப்பு அதிகம் உள்ளது.

இவற்றை சாப்பிடுவதால், சில வகை புற்று நோய்களும் உருவாகின்றன. இதன் ஆபத்தை உணராமல், நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஆந்திர மாநில மிளகாய் வற்றல்களை பல்வேறு மாநில மக்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நீட்டு மிளகாய்

இது குறித்து, நல்லகீரை நிறுவனர் ஜெகன் கூறியதாவது:

உலகம் முழுதும் நீட்டு, குண்டு என, இரண்டு ரகங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் குண்டு மிளகாய் சாகுபடி அதிகம் நடக்கிறது. ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மழையை பயன்படுத்தி மிளகாய் சாகுபடி அதிகம் நடக்கிறது. எனவே, விவசாயிகள் நினைத்தாலும், அதிக உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், பாசனத்திற்கு அதிகமான நீர் தேவைப்படும்.

ஆனால், ஆந்திராவில் நிலத்தடி நீர் ஆதாரங்கள், ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீரை பயன்படுத்தி சாகுபடி நடக்கிறது. அதிக மகசூல் பெறுவதற்கு பலவகை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுப்பாடின்றி அம்மாநில விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். நீட்டு மிளகாய் தான் அதிகம் மகசூலும் செய்யப்படுகிறது.

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மிளகாய் காய்ந்த பின், மிளகாய் வற்றலில் தயாரிக்கும் பொடிகளை, இறைச்சிகள், கடல் உணவுகளில் பயன்படுத்தும் போது நிகழும் வேதி மாற்றத்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

உணவில் நிறத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதற்காக, பல தனியார் நிறுவனங்களும், வண்ணமயமான மிளகாய் பொடிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. நாட்டில் பெரும்பாலான மசாலா நிறுவனங்களும், ஆந்திராவில் இருந்து தான் மிளகாய் வற்றல்களை வாங்கி, பல வகை பொடிகளை தயாரித்து விற்பனை செய்கின்றன.

விழிப்புணர்வு தேவை

இவை போன்ற மிளகாய் பொடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; இது குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மிளகாய் வற்றல் பொடிகளை, உணவுகளில் பல்வேறு நாட்டினர் பயன்படுத்துவது கிடையாது.

பெயின்ட் உள்ளிட்டவற்றில் நிறத்தை கூட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். மிளகாய் வற்றல் விற்பனை வாயிலாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. இதனால், அம்மாநில அரசுகளும், உணவு பாதுகாப்பு துறையும், இதை கண்டு கொள்ளாமல் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

'கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நியமன அலுவலர்கள் உள்ளனர். மேலும், உணவுப்பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகங்களும் உள்ளன. தற்போது, பயன்பாட்டில் உள்ள மிளகாய் வற்றல் மற்றும் மிளகாய் பொடிகளில், எவ்வித நஞ்சு பொருட்களும் இருப்பதாக ஆய்வகங்களில் கண்டறியப்படவில்லை.

சந்தேகம் ஏற்படும் போது, மிளகாய் உள்ளிட்ட ஒவ்வொரு உணவுப்பொருளும் ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும். புற்று நோய் ஏற்படுத்தும் நச்சு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று வித பாதிப்பு இருக்கும்!

காற்று, தண்ணீர், உணவுப்பொருட்கள் வாயிலாக, மனித உடலுக்குள் செல்லும் வேதிப்பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும். பயிரிடும் போது அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தினால், அந்த மிளகாயில் இயற்கையாகவே புற்று நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கும். அவற்றை சாப்பிடுவதன் வாயிலாக புற்று நோய் பாதிப்பு ஏற்படும். மிளகாய் வற்றலை சிவப்பாக மாற்ற கலர் பூசும் வாய்ப்பு உள்ளது. அந்த கலருடன் சாப்பிடும் போது, புற்று நோய், சர்க்கரை நோய், மலட்டுத் தன்மை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ஆணுக்கு பெண்ணின் தன்மையையும், பெண்ணுக்கு ஆணின் தன்மையையும் ஏற்படுத்தி, ஹார்மோன் மாற்றத்தையும் ஏற்படுத்தும். இது பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாகவும், பொதுமக்களுக்கு பிரச்னை வராமல் மத்திய, மாநில அரசுகளால் தடுக்க முடியும்.- க.குழந்தைசாமி, பொது சுகாதாரத்துறை நிபுணர்



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us