தனி வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம்: காற்றில் கரைந்த தமிழக அரசின் அறிவிப்பு
தனி வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம்: காற்றில் கரைந்த தமிழக அரசின் அறிவிப்பு
ADDED : மார் 03, 2025 05:07 AM

சென்னை : 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த, 1.10 லட்சம் பேருக்கு, தனி வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பு, செயல்பாட்டிற்கு வராமல் அறிவிப்போடு நின்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு, வீட்டு வசதி அளிப்பதற்கான திட்டங்களை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவி பெறப்படுகிறது.
நிதியுதவி
நகர்ப்புறங்களில் சொந்தமாக மனை வைத்திருப்போர், தனி வீடு கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதியுதவி வழங்குகிறது. அந்த வகையில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த, 1.10 லட்சம் மக்கள், தங்கள் நிலத்தில் தனி வீடு கட்ட, தலா, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்' என, 2023 - 24ம் நிதியாண்டில் தமிழக அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பை செயல்படுத்த, கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது, தனி திட்டமா என்பதே தெரியாத நிலையில், இத்திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி என, மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. திட்டம் அறிவிப்போடு நின்று விட்டது.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவான நடைமுறைகள் அடிப்படையில், தனி வீடு கட்ட மானியம் வழங்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாயிலாக மட்டுமே மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, எந்த திட்டம் பொருந்தும் என்பது முடிவு செய்யப்படுகிறது.
சிலருக்கு மத்திய அரசின், பி.எம்.ஏ.ஒய்., திட்டம் வாயிலாக மானியம் கிடைக்கும். சிலருக்கு தமிழக அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக மானியம் வழங்கப்படும். தமிழக அரசு அறிவித்த திட்டத்தில், இதுவரை மானியம் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகையில், 'நகர்ப்புறங்களில், தனி வீடு கட்ட, 1.10 லட்சம் பேருக்கு, தலா, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற திட்டம் தொடர்பாக, எந்த தகவலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து வரவில்லை.
'தற்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்கள் பெயரில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக, இதுவரை எந்த வழிகாட்டுதலும் வரவில்லை' என்றனர்.
வழிமுறை
பொதுவாக அரசு அறிவிப்பு வெளியிட்டால், அதை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படும். திட்டத்தை செயல்படுத்த, காலவரம்பு நிர்ணயம் செய்யப்படும். திட்டத்தில் பயன் பெற, விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை கள் வெளியிடப்படும்.
இதில் எதுவுமே இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை. எதன் அடிப்படையில், திட்டம் அறிவிக்கப்பட்டது, ஏன் செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதற்கு, அதிகாரிகளிடம் பதில் இல்லை.