சசி உறவினர் கைதை காட்டி வைத்தி முயற்சியை முறியடித்த இ.பி.எஸ்.,
சசி உறவினர் கைதை காட்டி வைத்தி முயற்சியை முறியடித்த இ.பி.எஸ்.,
ADDED : செப் 12, 2024 07:15 AM

சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை அ.தி.மு.க.,வில் இணைக்க, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மேற்கொண்ட முயற்சியை, சசிகலா உறவினர் பாஸ்கர் கைது விவகாரத்தை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முறியடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நாங்கள் இ.பி.எஸ்.,சையும், மற்றவர்களையும் இழக்க விரும்பவில்லை.
'அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்; சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்.,, இ.பி.எஸ்., அனைவரையும் இணைக்க வேண்டும்' என்றார். வைத்திலிங்கம் கருத்தை முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆமோதித்து, 'பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்' என, பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சசிகலாவின் நெருங்கிய உறவினர் பாஸ்கர், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோசடி வழக்கு ஒன்றில் கைதானார். இவர், சசிகலாவின் அண்ணி இளவரசி மகன் விவேக்கின் மாமனார். இந்த விவகாரம் சசிகலாவுக்கு தெரிய வந்ததும், அவர் இளவரசி குடும்பத்தினர் மீது கோபம் அடைந்தார். கட்சி ஒருங்கிணையும் நேரத்தில், தனக்கு நெருக்கடியும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்படுவதா என கண்டித்துள்ளார்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திய இ.பி.எஸ்.,, சசிகலாவை சேர்த்தால், இது போன்ற அவப்பெயரை அடிக்கடி சந்திக்க நேரிடும் என கூறி, வைத்திலிங்கத்தின் முயற்சியை முறியடித்துள்ளார்.
இது குறித்து, இ.பி.எஸ்.,க்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:
சசிகலாவை கட்சியில் சேர்த்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் தலைதுாக்கும். சசிகலா தன் குடும்ப உறுப்பினர்கள் தான் பலம் என கருதுகிறார். ஆனால், அது தான் அவருக்கு பலவீனம். தகுதியான கட்சியினரை புறக்கணித்து விட்டு, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என தகுதி இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்து, கட்சியை கைப்பற்றி விடுவர். வீண் குழப்பம் ஏற்படும்.
தற்போதைய மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பதவியில் தொடர வேண்டுமானால், சசிகலாவை சேர்க்காமல் இருக்க வேண்டும். அவரை சேர்த்து விட்டால், அவர்களுக்கு பதவி இல்லாமல் போய் விடும்.
சசிகலா, ஓ.பி.எஸ்.,, தினகரன் ஆகிய மூவரையும் சேர்க்க இ.பி.எஸ்.,க்கு விருப்பமில்லை. வைத்திலிங்கத்தை சேர்க்க வேண்டும் என்றால், அவர் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பதவி கேட்டு நிர்ப்பந்திக்கக்கூடாது. அவருக்கு மாநில அளவில் பதவி தர இ.பி.எஸ்., தயார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -