உண்ணாவிரதத்திற்கு சீமான் ஆதரவு இடைத்தேர்தலில் பழனிசாமி கைமாறு?
உண்ணாவிரதத்திற்கு சீமான் ஆதரவு இடைத்தேர்தலில் பழனிசாமி கைமாறு?
ADDED : ஜூன் 29, 2024 03:53 AM

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., போட்டியிலிருந்து விலகி விட்டதால், அக்கட்சியின் ஓட்டுகள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி அளவில், தி.மு.க., கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 72,000 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க.,வுக்கு 65,000, நாம் தமிழர் கட்சிக்கு 8,000 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
தற்போது களத்தில் மோதும் தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளுமே, இந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய வேட்பாளர்களையே நிறுத்தி உள்ளன. இதனால், வன்னியர் சமுதாய ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.
தே.ஜ., கூட்டணியில்இடம்பெற்றுள்ள பா.ம.க., வெற்றி பெற்று விட்டால், வன்னியர் சமுதாயத்தினரிடம் அக்கட்சி மீண்டும் செல்வாக்கு பெற்று விடும்.
அதனால், அ.தி.மு.க., ஆதரவு வன்னியர் ஓட்டு சதவீதம் குறையக்கூடும் என்றும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், பழனிசாமி கருதுகிறார்.
அதனால், பா.ம.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளவும், சீமானுக்கு ரகசிய ஆதரவு அளிக்கவும் அ.தி.மு.க., திட்டமிட்டு இருப்பதாககூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான், சென்னையில் உண்ணாவிரதம் இருந்த அ.தி.மு.க.,வுக்கு சீமான் ஆதரவு அளித்த விவகாரம் என்றும் சொல்லப்படுகிறது.
கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்த பழனிசாமியை, சீமான் அறிவுறுத்தல்படியே, நாம் தமிழர் கட்சி பொருளாளர் ராவணன் சந்தித்து ஆதரவு அளித்தார்.
அவரது ஆதரவை பழனிசாமியும் நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டார் என்கிறது, அ.தி.மு.க., வட்டாரம்.
இந்த நிகழ்வுகளுக்குப் பின், விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களோடு, அ.தி.மு.க., தொண்டர்களும் கைகோர்த்து தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
- நமது நிருபர் -.