ஓட்டுப்போட வரும் மக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கலாமே: நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கு உதவும்
ஓட்டுப்போட வரும் மக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கலாமே: நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கு உதவும்
ADDED : ஏப் 07, 2024 05:07 AM

தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள் தருவிக்கும் பணி நடந்து வருகிறது.
அடுத்த கட்டமாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி நடைபெறும். ஓட்டுச்சாவடியில் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இருக்கிறதா என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஓட்டுச்சாவடியின் தன்மையை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் நிழல் பந்தல்மற்றும் இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஓட்டுப்போட வருபவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் அல்லது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமாக, (அரசியல் கட்சிகளை தவிர்த்து), ஓட்டுச்சாவடிகளுக்கு அருகாமையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கு விருப்பமுள்ளோரிடம் இப்போதே விண்ணப்பம் பெற்று, தகுதியானவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓட்டுப்போட வரும் பொதுமக்களை வெயில் பாதிப்பில் இருந்து பாதுகாக்க அது உதவும். இதற்கான முன்னெடுப்புகளை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இப்போதே மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், வெயிலை காரணம் காட்டி, ஓட்டுச்சாவடிக்கு வருவதை வாக்காளர்கள் தவிர்ப்பார்கள். அதனால், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பது எட்டாக்கனியாகிவிடும்.
ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, வாக்காளர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு தீர்வு காண, தேர்தல் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நமது நிருபர் -

