கருணாநிதி சம்மதம் பெற்ற பிறகே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: உண்மையை அம்பலப்படுத்தும் அதிர்ச்சி ஆவணங்கள்
கருணாநிதி சம்மதம் பெற்ற பிறகே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: உண்மையை அம்பலப்படுத்தும் அதிர்ச்சி ஆவணங்கள்
UPDATED : ஏப் 02, 2024 07:02 AM
ADDED : ஏப் 01, 2024 11:57 PM

கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் முன்கூட்டியே ஆலோசிக்கப்பட்டது. ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த அவர், அரசியல் காரணங்களுக்காக தன்னால் வெளிப்படையாக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும், ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு எழாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறேன் என்றும் வாக்குறுதி அளித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டில்லியில் கூறியதாவது: கடந்த 1974ல், இந்தியா - இலங்கை இடையே கடல் எல்லை ஒப்பந்தம் வகுக்கப்பட்ட போது, இலங்கை கடல் எல்லைக்குள் கச்சத்தீவு சென்றது. அந்த ஒப்பந்தத்தில், இறையாண்மைக்கு உட்பட்டு, இரு நாடுகளுமே சுதந்திரமாக கடல் எல்லைகளை கடந்து செல்ல உரிமை உள்ளது என்பது, முதல் அம்சமாக இடம் பெற்றிருந்தது.
பயண ஆவணங்கள் ஏதுமின்றி, கச்சத்தீவுக்கு எப்போதும் போல சென்று வர, இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்பது, இரண்டாவது அம்சமாக இடம் பெற்றிருந்தது. பல்லாண்டுகளாக இருந்து வரும் நடைமுறையின்படி, இரு நாட்டு படகுகளுமே, இரு நாட்டு கடல் பகுதிகளுக்குள், எப்போதும் போல சென்று வர உரிமை உள்ளது.
இது குறித்து, பார்லிமென்டில் பேசிய அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், 'பாக்., ஜலசந்தியில் வரையறை செய்யப்பட்டுள்ள கடல் எல்லையானது, இரு நாடுகளுக்கும் சமமான அளவில் பிரித்து அளிக்கப்பட்டு உள்ளதாக கருதப்படும். மீன்பிடி உரிமை, சுற்றுலா, கடல் பயணம் ஆகியவற்றில், இரு நாடுகளுக்கும் எப்போதும் இருந்து வரும் உரிமை, இனியும் தொடரும்' என்று உறுதி அளித்தார்.
அதன்பின், இரண்டாண்டுகள் கழித்து, மத்திய அரசு தரப்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், 'இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க மாட்டார்கள்' என, கூறப்பட்டிருந்தது. அதாவது, 1974 ஒப்பந்தத்தில், நம் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், அடுத்த இரண்டே ஆண்டுகளில், 1976ல் பறிக்கப்பட்டன.
அந்த நேரத்தில், வெளியுறவு இணையமைச்சராக இருந்த இ.அகமது, 2006ல் பார்லிமென்டில் அளித்த பதிலில், '1974 மற்றும் 1976ல் இரு நாடுகளும் ஒரு மனதாக பகிர்ந்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது' என்று கூறினார்.
இதுதான், இப்போது வரையிலான நிலை. கடந்த 20 ஆண்டுகளாக, 6,184 மீனவர்கள் கைது செய்யப்பட்டும், 1,175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பார்லிமென்டில் இந்த விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு நான் மட்டுமே, 21 முறை பதில் கடிதம் எழுதி விட்டேன். இது ஏதோ திடீரென முளைத்த பிரச்னை இல்லை. நிறைய முறை பேசப்பட்டு வந்த விவகாரம் தான்.
உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இது இப்போது பேசப்படுகிறது. மீன்பிடி உரிமை பறிபோனது எப்படி என்ற அதிர்ச்சி தகவலை, ஆர்.டி.ஐ., வாயிலாக கிடைத்த இரண்டு ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன.
ஒன்று, 1968ல் பார்லிமென்ட் ஆலோசனை குழுவின் விவாதம் குறித்த ஒரு ஆவணம். மற்றொன்று, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, வெளியுறவு செயலர் இடையே 1974 ஜூனில் நடந்த ஆலோசனை குறித்த ஆவணம்,
காரணம், 1974, 1976 என இரு ஒப்பந்தங்கள் மட்டுமே முன்னர் வெளியில் தெரியும். இப்போது கிடைத்துள்ள இந்த ஆவணங்கள் வாயிலாக, ஒப்பந்தங்களின் பின்னணி மற்றும் அதில் மறைக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன? யார் இந்த நிலைமைக்கு காரணம் உள்ளிட்ட விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
முதல் ஆவணம்
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன், இந்திய சட்டத்துறை கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தது. அதன்படி, 1958ல் அப்போதைய அட்டர்னி ஜெனரல் சேதல்வாத், 'என்னிடம் உள்ள ஆவணங்களின்படி, கச்சத்தீவு என்ற பகுதியின் இறையாண்மையானது முன்னரும் சரி, இப்போதும் சரி, இந்தியாவிடம் தான் உள்ளது என்பதையே காட்டுகிறது.
'இந்தியாவின் மீன்பிடி உரிமையை, கச்சத்தீவில் நிலைநாட்டுவதே சரி' என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அப்போதைய வெளியுறவு அமைச்சரும், சட்ட நிபுணருமான டாக்டர் கிருஷ்ணா ராவும் இதையே உறுதிப்படுத்தினார். இவ்வளவு சொல்லியிருந்தும், 1974ல் தீவு பறிபோனது; 1976ல் மீன்பிடி உரிமையும் பறிபோனது.
காரணம், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா ஆகியோர், கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; அதை ஒரு தலைவலியாகவே கருதினர். அந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யாக இருந்த ஜி.விஸ்வநாதன், பார்லிமென்டில் இதுபற்றி விரிவாக பேசியுள்ளார்.
இரண்டாவது ஆவணம்
இது, 1974 ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஆலோசனை பற்றியது. அதாவது, 1974 ஜூன் 19 அன்று, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த ஆலோசனை குறித்த ஆவணம். இந்த ஆவணத்தின்படி, வெளியுறவு செயலர், முதல்வர் கருணாநிதி, தலைமை செயலர் சபாநாயகம், உள்துறை செயலர் அம்புரூஸ் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய வெளியுறவு செயலர், 1973 அக்., 13ல், தமிழக முதல்வர் கருணாநிதி, வெளியுறவு அமைச்சர், அதிகாரிகள் ஆகியோருடன், டில்லியில் நடத்திய பேச்சை நினைவுபடுத்தினார். அதாவது, இலங்கையுடன் போடப்படும் ஒப்பந்தம் குறித்த அனைத்து விபரங்களும் தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தம் குறித்த சாதக, பாதகங்கள் மற்றும் மாநில அரசின் கருத்துக்கள் குறித்தும் முதல்வரிடம் கேட்கப்பட்டன. மேலும், இந்தியாவுக்கு பாதகம் இல்லாமல், பாக் ஜலசந்தி கடல் எல்லையை பிரிப்பது குறித்த மாநில அரசின் யோசனையையும், தமிழக முதல்வரின் கருத்துக்களையும் வெளியுறவு செயலர் கேட்டார்.
ஆலோசனையின் முடிவில், மத்திய அரசு முன்வைக்கும் ஒப்பந்த அம்சங்களுக்கு, தமிழக முதல்வர் சம்மதம் தெரிவித்தார். அதேசமயம், வெளிப்படையான அரசியல் காரணங்களுக்காக, இந்த ஒப்பந்தம் மீது ஆதரவான நிலைப்பாட்டை தன்னால் பகிரங்கமாக எடுக்க முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தம் காரணமாக, கீழ்மட்ட அளவில் எதிர் விளைவுகள் ஏதும் ஏற்பட்டு விடாமலும், அப்படியே எழுந்தாலும் அவற்றை தீவிரம் அடைய விடாமல் பார்த்துக் கொள்ளவும் உதவி செய்கிறேன் என்றும், முதல்வராக இருந்த கருணாநிதி தெரிவித்தார். இதற்காக, முதல்வருக்கு வெளியுறவு செயலர் பாராட்டு தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இவை தான் நடந்த உண்மைகள். ஆவணங்கள் தெளிவாக உள்ளன. மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை கூறுகிறோம். மற்றபடி அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை. மேலும், தற்போது இவ்விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், இனி என்ன செய்வது என்பது குறித்து கூற முடியாது.
கடந்த 20 ஆண்டுகளில், 6,184 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 1,157 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிக்கும் முயற்சியில், தற்போதைய மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கச்சத்தீவு பிரச்னைக்கு, இலங்கை அரசுடன் பேசி மத்திய அரசு தீர்வு காணும்.
தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து கச்சத்தீவை பறிகொடுக்க காரணமாக இருந்துவிட்டு, தற்போது எதுவும் தெரியாதவர்கள் போல பேசுவது ஏற்புடையதாக இல்லை. தற்போதைய நிலைமைக்கு, இந்த இரு கட்சிகள் தான் முழு காரணம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

