அமெரிக்காவில் சிவகுமார் விளையாடிய 'சதுரங்க வேட்டை'
அமெரிக்காவில் சிவகுமார் விளையாடிய 'சதுரங்க வேட்டை'
ADDED : செப் 18, 2024 01:47 AM

கர்நாடகாவில் முதல்வராக இருக்கும் சித்தராமையாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு துணை முதல்வர் சிவகுமாருக்கும் அதிகாரம் இருக்கிறது என்றே சொல்லலாம். சிலரை தவிர, பெரும்பாலான தலைவர்கள், சிவகுமாரின் பேச்சுக்கு கட்டுப்படுகின்றனர். அவரை கண்டால் அச்சப்படுகின்றனர்.
இவர் ஒரு முடிவை எடுத்தால், யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை. அந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். இதை பயன்படுத்தி, முதல்வர் பதவி பெறுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சந்தேகம்
ஆனால், 'மூடா' முறைகேடு பிரச்னை எழுந்த போது, சித்தராமையா முதல்வராக தொடர்வார் என்று அவரே அறிவித்தது, முதல்வர் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மூடா முறைகேடு வழக்கு, உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வந்த வேளையில், இம்மாதம் 8ம் தேதி, திடீரென குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார் சிவகுமார்.
இவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் பங்கேற்றார். காங்., கட்சியின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவும் வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சிவகுமார், முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தியாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை நீண்ட நேரம் விளக்கி, சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., - -ம.ஜ.த., பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் கூறியுள்ளார். எனவே தன்னை முதல்வராக்கினால், சூழ்நிலையை சமாளித்து, பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் விளக்கி உள்ளார்.
நல்ல முடிவு
தன்னுடன் மற்ற எந்த தலைவர்களும் இல்லாததால், தனக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, சொல்ல வேண்டிய விஷயத்தை லாவகமாக சொல்லி உள்ளார். துணை முதல்வர் பேச்சை கவனமாக கேட்ட ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தாராம்.
இதற்கிடையில், அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, நேற்று அதிகாலை சிவகுமார், பெங்களூரு திரும்பினார். கலபுரகிக்கு செல்வதற்கு முன், சதாசிவ நகர் வீட்டில் கூறுகையில், ''ராகுல் எங்கள் கட்சி தலைவர். அவரை சந்திப்பதற்கு, யாருடைய அனுமதியும் தேவையில்லை.
''அமெரிக்காவில் ராகுலுடன் என்ன பேசினேன் என்பதை ஊடகங்களுக்கு எப்படி தெரிவிக்க முடியும். என் தம்பி, மனைவி, மடாதிபதிகளுடன் என்ன பேசினேன் என்பதையும் நான் எப்படி சொல்ல முடியும்,'' என்றார்.
அடுத்த கட்டம்
அதாவது, ராகுலுடன் ரகசியமாக பேசிய விஷயங்களை, பகிரங்கமாக சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அமெரிக்காவில் அரசியல் விளையாட்டு விளையாடிய சிவகுமார், கர்நாடகாவில் தன் அடுத்தகட்ட விளையாட்டை விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவருக்கு பதிலடி கொடுப்பதற்காக, சித்தராமையா ஆதரவாளர்கள் மற்றொரு விளையாட்டை விளையாட வியூகம் வகுத்துள்ளனர். ஒரு வேளை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டாலும், சிவகுமார் அல்லாமல், தன் ஆதரவாளருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி வலியுறுத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஏற்கனவே முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாம்.
முதல்வர், துணை முதல்வர் நடத்தும் சதுரங்க விளையாட்டில், காங்கிரஸ் தொண்டர்கள், பிரமுகர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
- நமது நிருபர் -