ADDED : மார் 14, 2025 05:47 AM

சென்னை : மாவட்ட செயலர்கள் பட்டியலை முழுமை செய்ய முடியாததால், த.வெ.க., தலைவர் விஜய் அதிருப்தி அடைந்துள்ளார்.
கட்சிக்கு, 120 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்படுவர் என்று, விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, 95 மாவட்ட செயலர்கள் பட்டியல் படிப்படியாக ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன.
நியமிக்கப்பட்ட மா.செ.,க்களை அழைத்து, சமீபத்தில், கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நடத்தப்பட்டது. மீதமுள்ள மாவட்ட செயலர்களையும் நியமித்த பின், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்த, விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், பதவிகளை பிடிப்பதில் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், 25 மாவட்ட செயலர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், மாவட்ட செயலர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, நேற்று விஜய் வந்தார்.
அவரது வீட்டிற்கு வெளியே கார்கள், இருசக்கர வாகனங்களில் திரண்டிருந்த கட்சியினர், தங்களுக்கு வேண்டியவர்களை, மாவட்ட செயலர்களாக நியமிக்க வேண்டும் என கோஷம் போட்டனர். விஜய் காரை வழிமறித்து கடிதங்களை நீட்டினர்.
இதனால், கோபம் அடைந்த விஜய், அவர்களை சந்திக்காமல் போய் விட்டார். கட்சி அலுவலகத்திற்குள் சென்ற விஜயை, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் படம் எடுத்தனர். அவர்களை ஓரமாக நிற்கும்படி கூறி, முறைத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் விஜய் சென்றார்.
இதன்பின், மாவட்ட நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினர். அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட, 19 மாவட்டங்களுக்கு செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. எஞ்சியுள்ள, 6 மாவட்ட செயலர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதேபோன்று, படிப்படியாக பட்டியல் வெளியிட்டால், முழுமையாக மாவட்ட செயலர்களை நியமிப்பதற்குள், சட்டசபை தேர்தல் வந்து விடும் என, கட்சியின் சமூக வலைதளப் பக்கத்தில், பலரும் கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பெண் தொண்டர் ஒருவர் தன் குழந்தைகளுக்கு உதவி கேட்டு, விஜய்யை சந்திக்க முயன்றார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை; இதனால், விஜய் செல்லும்போது, அவர் கோஷம் போட்டார்.
ஆதரவாளருக்கு ம.செ., பதவி கேட்டு கோஷம் போடுவது, உதவி கேட்க வந்து கிடைக்காததால் கோஷம் போடுவது உள்ளிட்ட கட்சியினர் செயல்பாடுகளால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.