'வணிக பயன்பாட்டுக்கு வருகிறது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்': இஸ்ரோ தலைவர் சோம்நாத்
'வணிக பயன்பாட்டுக்கு வருகிறது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்': இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ADDED : ஆக 17, 2024 01:22 AM

“எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் இனி வணிக ரீதியாக பயன்படுத்தப்படும்,” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில், அவர் நேற்று அளித்த பேட்டி:
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், சரியாக திட்டமிடப்பட்ட புவி வட்டப் பாதையில், இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.
எஸ்.எஸ்.எல்.வி.,யில் மூன்று ராக்கெட் ஏவப்பட்டதை அடுத்து, இனி வணிக ரீதியில் பயன்படுத்தப்படும். இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளில் சூரியசக்தி மின்தகடு செயல்படத் துவங்கிஉள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றிகரமாக அமைந்ததால், தனியார் நிறுவனங்கள் இடையே அதன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடக்கும். இதுபோல் நடக்க இருப்பது, இதுவே முதல்முறை.
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வணிக ரீதியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசின், 'நியுஸ்பேஸ் இந்தியா' மேற்கொள்ளும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் சிறப்பாக செயல்படக் கூடிய இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. மூன்றாவது ஏவுதளம், துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது.
இரு ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரும். அங்கிருந்து இலங்கை நாட்டின் மேல் செல்லாதபடி, தெற்கு நோக்கி ராக்கெட் ஏவப்படும்.
உற்பத்தி, திறன் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு, பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டின.
அதில், நிதி நிலைமை சிறப்பாக உடைய நிறுவனங்களுடன் தொழில்நுட்பம் பரிமாற்றம் செய்யப்படும். இது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இ.ஓ.எஸ்., செயற்கைக் கோளில் உள்ள ஆய்வு கருவி, விண்வெளியில் புறஊதாக்கதிர்கள், 'காமா' கதிர் தாக்கம் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும்.
இது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்ட ஆய்வுக்கு உதவும். ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய ராக்கெட், சதீஷ் தவான் ஆய்வு மையத்திற்கு வந்து விட்டது. அதை ஒருங்கிணைக்கும் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டில் அத்திட்டம் முழுதுமாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று நாளில் ஏவுவோம்
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் திட்டத்திற்கு, 2018ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறுகிய காலமான நான்கு ஆண்டுகளுக்குள், 2022 ஆகஸ்டில் எஸ்.எஸ்.எல்.வி., முதல் ராக்கெட் ஏவப்பட்டது. அதிலும், இரு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு இருந்தது. இருப்பினும், இஸ்ரோ குழுவினரின் உழைப்பால், புதிய ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை, ஏவுதளத்தில் வைத்து, 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்க முடியும். அடுத்த இரு நாட்களுக்குள் அனைத்து சோதனையும் முடித்து, மூன்றாவது நாளில் விண்ணில் ஏவப்படும்.
- எஸ்.எஸ்.வினோத்
எஸ்.எஸ்.எல்.வி., திட்ட இயக்குனர்