பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து; ஆதரவும் எதிர்ப்பும்
பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து; ஆதரவும் எதிர்ப்பும்
UPDATED : மார் 15, 2025 08:22 AM
ADDED : மார் 15, 2025 05:36 AM

ஷர்மிளா தேவி, தொழில்முனைவோர்:
பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இளம்தலைமுறையினரிடையே போதைப்பழக்கம் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களை வழிநடத்த கவுன்சிலர்களை நியமிப்பதற்கு தனி பட்ஜெட் ஒதுக்கியிருக்கலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான போதுமான அரசுப் பள்ளிகள் இல்லை. கண் தெரியாத, காதுகேளாத, நடக்க முடியாதவர்களுக்கு இன்னும் உதவ வேண்டும். பள்ளிகளில் வீல்சேர் வைத்தால் மட்டும் போதாது. மற்ற மாற்று திறனாளி மாணவர்களின் நலனுக்காக சிறு பட்ஜெட் ஒதுக்கியிருக்கலாம்.
ரகுநாதராஜா, தலைவர், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம்:
மதுரையில் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு இடம் கிடைக்காமல் சிரமப்படும் நிலையில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளை பராமரிப்பதற்கு தனியாக உள் கட்டமைப்பு நிதி ஒதுக்கியிருக்கலாம். அதைத்தான் எதிர்பார்த்தோம். மதுரை கப்பலுார் உட்பட பல்வேறு தொழிற்பேட்டைகளில் ரோடே இன்றி மோசமாக உள்ளது.
100 கிலோவாட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் எல்லா தொழில் நிறுவனங்களும் தனியாரிடம் மின்கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 50 கிலோவாட் மின்நுகர்வை பயன்படுத்தும் அத்தனை தொழில்களுக்கும் சோலார், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தனியாரிடம் இருந்து மின்கொள்முதல் செய்ய அனுமதி வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் 2024 ல் மட்டும் 4500 குறு, சிறுதொழில்கள் மூடப்பட்டன.
அதற்கு காரணம் மின்கட்டண உயர்வு தான். அதை காப்பாற்ற வேண்டுமெனில் தனியாரிடம் மின்கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
நவாஸ் பாபு, தலைவர், மதுரை மஹியா தொழிற்பேட்டை:
தமிழகத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் பொருளாதார ஆய்வு நடத்தப்பட்டது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்கள் பிரித்து சர்வே நடத்தியுள்ளனர்.
மதுரை - துாத்துக்குடி காரிடாரை உள்ளடக்கி தெற்கு நோக்கி வளர்ச்சியை கொண்டு வந்திருக்க வேண்டும். கோவை மெட்ரோவுக்கு தமிழக அரசின் பங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை மெட்ரோவிற்கு நிதி ஏதும் ஒதுக்காதது மதுரை மக்களுக்கு வருத்தமே.
தீனதயாளன், பொருளாதார துறை பேராசிரியர்:
பெற்றோர் இல்லாத குழந்தைகளை பராமரிப்பதற்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 வழங்குவது கல்வியில் மறுமலர்ச்சியில் ஏற்படுத்தும் சமூகப்பார்வை. சுற்றுச்சூழலுக்கான நிதி ஒதுக்கீடு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கியது, அரசுப்பள்ளிகளுடன் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காகவும் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
முதியோர்களுக்கான அன்புச்சோலை மையங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது தற்கால முதியோரின் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி குறிப்பிடவில்லை. அரசு வருவாய்ப் பெருக்கத்திற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை என்ற அறிவிப்பும் வரவில்லை. கல்விக்கடனுக்கான முக்கியத்துவம், அதற்கான ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திய பட்ஜெட்டாகவே பார்க்கிறோம்.
நித்யாபாய், தனியார் நிறுவனம்:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்த கட்டணத்தில் தோழியர் விடுதிகளை அரசே அமைப்பது என்பது வரப்பிரசாதம். இலவச பஸ் பயணம் போன்று பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் தோழியர் விடுதி பாராட்டுக்குரியது. பெண்கள் பெயரில் ரூ. 10 லட்சம் வரை பதிவு செய்யப்படும் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைவது என்பது பெண்கள் பேரில் சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்கும். மகளிருக்கான உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிறைய நிராகரிக்கப்பட்டது. மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி கொடுப்பதாக சொல்வதும் நல்ல விஷயம்.
சுரேஷ் குமார், வர்த்தகர்:
தமிழகத்தில் 6 ஆயிரத்து 100 கி.மீ., துாரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 200 கோடி தார் ரோடு அமைக்க நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அவரசர கதியில் தார் ரோடு அமைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்தாண்டு போடப்பட்ட பட்ஜெட்டின் பல திட்டங்கள் நிறைவேறாமல் உள்ளன. குறிப்பாக மதுரையில் 15 சதவீத ரோடு பணிகள் தான் முடிவடைந்துள்ளன. பல இடங்களில் ரோடுகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே இருந்த திட்டம் முடியாத நிலையில் இந்த பட்ஜெட் அர்த்தமற்ற பட்ஜெட்.
பானுமதி, முன்னாள் வங்கி மேலாளர்: 2026ல்தமிழக அரசின் ஆட்சிகாலம்முடிவடையவுள்ள நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் இந்த பட்ஜெட் வெளியாகியுள்ளது. புதிய சிட்டி உருவாக்கப்படும், அடையாறு சுத்தம் செய்யப்படும் என கேட்க சந்தோஷமாக இருந்தாலும் எந்த அளவிற்கு நடைமுறையில்சாத்தியம் என தெரியவில்லை.
ரூ.10 லட்சம் வரையில்பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளின் பதிவுக் கட்டணத்தில்ஒரு சதவீதம் வரை சலுகை, ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
மாநிலம் என்பது மத்திய அரசின் ஒரு அங்கம். நாடு முழுதும் ரூபாய்க்கான லச்சினையாக ஒன்றை ஏற்றுக்கொண்ட பின் தமிழில் 'ரூ' என குறிப்பிடுவது வேறு எதையோ மறைக்க நடத்தப்படும் நாடகம்.
-தினேஷ், தலைவர் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம்:
ரூ.2.5 லட்சம் கோடி குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி, கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ.74 கோடி மானிய நிதி ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். நகரில் பஸ்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. புதிய பஸ்கள் குறிப்பாக மதுரைக்கு மட்டும் 100 மின்சார பஸ்கள் வழங்குவதற்கு நன்றி. 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர். மதுரையில் அமைய உள்ள காலணி தொழிற்பூங்கா மூலம் தென்மாவட்ட மக்களுக்கு வேலை கிடைக்கும். குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு எந்த சலுகையும் வழங்காதது வருத்தம் அளிக்கிறது.
எஸ்.பிரியதர்ஷினி, ஐ.டி.,நிறுவன நிர்வாகி
: பெண்களுக்கு விலையில்லா பயணம் செய்ய ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். பெண்கள் பயணிக்கும் பஸ்கள் பழைய, சேதமடைந்த பஸ்களாக உள்ளன. அதற்கு பதிலாக புதியவை வாங்கி இருக்க நிதிஒதுக்கலாம். தோழியர் விடுதிகள் ஏற்கனவே 13 உள்ளது.
அவை நன்கு பராமரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இப்படி பலதிட்டங்களை துவக்குவதும் அதனை அப்படியே பராமரிக்காமல் விடுவதும்தான் நடக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
அதனை தரமானதாக வழங்கினால் நல்லது. ஐ.டி., பார்க்குகளை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அறிவித்தவற்றில் ஐ.டி., கம்பெனிகள் வந்துள்ளனவா. அவை முறையாக செயல்படுகின்றனவா என்றால் இல்லைதான். கடன்வாங்கி செலவு செய்தாலும் வீணாகத்தான் ஆகிறது. இந்நிலை நீடித்தால் தமிழகத்தின் நிலை கஷ்டமாகிவிடும்.
பெ.சீனிவாசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்: நகர்ப்புறத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அறிவிப்பு 2026 மே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓட்டு வங்கியை பெறுவதற்கான அறிவிப்பு என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும் வகையில் 1.4.2026 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 1.4.2025 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்து இருக்கலாம்.
ஆளும் அரசின் கடந்த காலத் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமாக உள்ளது.
இருப்பினும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே 110 விதியின் கீழ் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
-பா.ஆரோக்கிய தாஸ், தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில தலைமை ஒருங்கி ணைப் பாளர்: 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் வாக்குறுதியாக இடம்பெற்றது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் போராட்ட களத்திற்கே வந்து உறுதியளித்தவர் இன்றைய முதல்வர். 2021 ல் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பங்களின் ஆதரவோடு தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. நான்கு ஆண்டுகளுக்கு பின் 3 ஓய்வூதிய திட்டங்களை ஆராய குழுஅமைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்தும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம், வருத்தத்தை அளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம், தி.மு.க.,வுக்கு ஏமாற்றத்தை அளிப்பர். இனி அரசு ஊழியர், ஆசிரியர்களோடு கூட்டணி வைக்கும் கட்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
இதுவரை சி.பி.எஸ்., திட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு மாத ஓய்வூதியம் வழங்காததற்கு, வரும் தேர்தலில் தண்டனை அளிப்பர். எங்கள் கோபம், சாபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
-எஸ்.பாஸ்கரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்:
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கம் குறித்து எதுவும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு கோரிக்கையை இந்தாண்டே நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அடுத்தாண்டுக்குரியதை அந்த ஆண்டில் கூற வேண்டியதுதானே.
கடந்த பட்ஜெட்டில் அரசு, கள்ளர், ஆதிதிராவிடர் என அனைத்து வகைப் பள்ளிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதாக அறிவித்து இருந்தனர்.
அதற்கான நடவடிக்கைகள் இல்லாத நிலையில், இந்த பட்ஜெட்டிலும் அதுகுறித்து எதுவும் கூறவில்லை. ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி பதவி உயர்வு வழங்கலாம். அதனால் ஏற்படும் காலியிடங்களில் புதியவர்களை நியமிக்கலாம். அதற்கான அறிவிப்பும் இல்லை.
ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் இல்லை
இயற்கை பேரிடரால் பாதிக்கும் கடலுார் மாவட்டத்தில் சென்னையை போல் மழை நீர் உறிஞ்சும் பூங்கா அமைக்கவும், மாவட்டத்தில் மணிமுக்தாறு, வெள்ளாறு, கெடிலம் ஆகியவற்றின் கரை மேம்பாட்டிற்கும், மென்பொருள் பூங்கா அமைக்கப்படும் என்ற முந்தைய அறிவிப்புக்கும் நிதி ஒதுக்கவில்லை. பண்ருட்டியில் முந்திரி பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை, குறித்த அறிவிப்பு இல்லை. ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது.
- மருதவாணன், சிறப்பு தலைவர்,
அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, கடலுார்.