ADDED : செப் 16, 2024 01:11 AM

சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைந்து விட்டதாக, கவர்னர் ரவி குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஒரு மாதத்தில், 17,810 பள்ளிகளை ஆய்வு செய்துள்ளனர்.
'தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், கிராமங்களிலும் பள்ளிகளை அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர்.
ஆனால், அந்த பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைந்து விட்டது. 8 - 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கு, 3ம் வகுப்பு பாட புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை' என, தமிழக கவர்னர் ரவி புகார் தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், துறை அதிகாரிகளுடன், கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார்.
அதில், ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்து, கல்வித்தரம் குறைய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரும் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஒரு மாதத்தில் மட்டும், 17,810 தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆய்வு செய்ததாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில், வட்டார கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்று, மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது தான், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி செய்து, கூடுதலாக எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி, பல லட்சம் ரூபாய் அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்விலேயே முறைகேடுகள் நடந்தது உறுதியாகி உள்ளது. இதன் வாயிலாக, கவர்னரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது.
அரசு பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்துக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், இனியும் இந்த நிலை நீடிக்காத வகையில், பள்ளி கல்வித்துறை விழிப்புடன் செயல்பட்டு, அரசு பள்ளி மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.