மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும்: குமாரசாமி
மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும்: குமாரசாமி
ADDED : ஜூலை 23, 2024 04:07 AM

“தமிழகத்துக்கு கர்நாடகா எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தியது இல்லை. கூடுதல் நீரை பயன்படுத்தும் நோக்கில் தீட்டப்பட்டுள்ள மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி நேற்று பெங்களூரில் கூறியதாவது:
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கே.ஆர்.எஸ்., அணைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அவரால் தான் தற்போது அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன போலும். கங்கா ஆரத்தி போன்று காவிரி ஆரத்தி செய்வது நல்ல விஷயம் தான்.
ஐந்தாறு நாட்களாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 5.6 டி.எம்.சி., தண்ணீர் சென்றுள்ளது. ஜூன், ஜூலையில் அளிக்க வேண்டிய நீரை விட அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நான் கூறுவது ஒன்று தான். தமிழக முதல்வர், கர்நாடகா மீதான தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு கர்நாடகா எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தியது இல்லை.
வீணாகும் உபரிநீரை நல்ல முறையில் பயன்படுத்தும் நோக்கில் மேகதாது திட்டத்துக்கு தமிழகம் சம்மதிக்க வேண்டும்.
கர்நாடக காங்., அரசு சில்லரைத்தனமான அரசியல் செய்கிறது. மத்திய அமைச்சர்களை பற்றி தரக்குறைவாக பேசுகிறது. மதிப்பிற்குரிய ராணுவத்தினரையும், துணை முதல்வர் இழிவாக பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -