ஆந்திரா மாணவர்களுக்கு ஒதுக்கீடு ரத்து; தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு
ஆந்திரா மாணவர்களுக்கு ஒதுக்கீடு ரத்து; தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு
UPDATED : மார் 01, 2025 11:48 AM
ADDED : மார் 01, 2025 03:10 AM

ஹைதராபாத்: தெலுங்கானா உயர் கல்வி நிறுவனங்களில், ஆந்திர மாணவர்களுக்கு வழங்கி வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, தெலுங்கானா அரசு உத்தரவிட்டது.
தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து பிரிந்த மாநிலம் என்பதால், உயர் கல்வி சேர்க்கையில் ஆந்திர மாணவர்களும் உள்ளூர் மாணவர்களாகவே கருதப்பட்டனர். இதன்படி, 85 சதவீத இடங்களில் ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மீதி 15 சதவீத இடங்கள் வேறு மாநிலத்தவருக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கையின்போது, ஆந்திர மாணவர்கள், 85 சதவீத ஒதுக்கீட்டுக்குள் வரமாட்டர் என, தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து பிரிந்தபோது, 2014-ல் ஏற்படுத்தப்பட்ட ஆந்திர பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி, பொது சேர்க்கைக்கான 10 ஆண்டு காலக்கெடு முடிந்து விட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெலுங்கானா கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:தெலுங்கானாவில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், 85 சதவீத இடங்கள் தெலுங்கானா மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். உள்ளூர் மக்கள் என்ற அடிப்படையில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் இந்த பிரிவில் இட ஒதுக்கீடு கிடையாது.
அவர்களை, மீதமுள்ள இடங்களில் தான் சேர்க்க வேண்டும். வெளிமாநில ஒதுக்கீட்டில் உள்ள, 15 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேருவதாக இருந்தால், அந்த மாணவர் வெளி மாநிலங்களில் படித்த காலத்தை தவிர்த்து, தெலுங்கானாவில் 10 ஆண்டு படித்திருக்க வேண்டும்.
மாணவரின் பெற்றோர், 10 ஆண்டுகள் தெலுங்கானாவில் வசித்திருக்க வேண்டும். தெலுங்கானாவில் வசிக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர் குழந்தைகள், பொதுத்துறை நிறுவன ஊழியரின் குழந்தைகள் உள்ளிட்டோரும் 15 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.