பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
ADDED : செப் 03, 2024 01:55 AM

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்ட இருவருக்கு, என்.ஐ.ஏ., வழக்குகளை விசாரிக்கும் டில்லி சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலை மிரட்டல்
சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஹிந்து முன்னணி பிரமுகர் கே.பி.சுரேஷ்குமார். அவர் ஹிந்து அமைப்பில் உறுப்பினராக இருந்து, அமைப்பு தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டினார்.
அதனால், அவருக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2014ல், ஆவடியில் சுரேஷ்குமார் மத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
அந்த வழக்கில், பயங்கரவாதி காஜா மொய்தீன் உள்ளிட்ட மூவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. நீண்ட காலம் சிறையில் இருந்த காஜா மொய்தீன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, தலைமறைவானார்.
துப்பாக்கி சூடு
வேறு சில வழக்குகளில் காஜா மொய்தீனை, டில்லி போலீசார் தேடினர்.
கடந்த 2020ல் டில்லி போலீசார், அவரை சுற்றி வளைத்தபோது, அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பினார். சையத் அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகியோருடன் சேர்ந்து, துப்பாக்கி சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, காஜா மொய்தீன் உள்ளிட்ட மூவரை, டில்லி போலீசார் தேடினர். வஜீராபாதில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர்.
மூவர் மீதும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை, டில்லி பாட்டியாலாவில் இருக்கும் என்.ஐ.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அதில், காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ் ஆகிய இருவருக்கும், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த காலமே தண்டனையாக அறிவிக்கப்பட்டதால், அப்துல் சமது விடுவிக்கப்பட்டார்.
- நமது நிருபர் -