'மாநில சுயாட்சி பற்றி இப்போது தான் தெரியுதா': சிதம்பரம், கபில் சிபலை விளாசிய தம்பிதுரை
'மாநில சுயாட்சி பற்றி இப்போது தான் தெரியுதா': சிதம்பரம், கபில் சிபலை விளாசிய தம்பிதுரை
UPDATED : ஜூலை 26, 2024 03:52 PM
ADDED : ஜூலை 26, 2024 01:43 AM

'நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான். சிதம்பரமும், கபில்சிபலும் வழக்கறிஞர்கள் அல்லவா. இருக்கும் இடத்திற்கு ஏற்ப பேசுவதில் வல்லவர்களான இருவரும் கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சி பற்றியெல்லாம் பேசுகின்றனர். அவர்கள் அப்படி பேசுவதுதான் வேடிக்கை,'' என்று, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை ராஜ்யசபாவில் நேற்று கடும் விமர்சனம் செய்தார்.
பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது, ராஜ்யசபாவில் நேற்று அ.தி.மு.க.,- எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: இந்த சபையில் இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். ஒருவர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம். மற்றொருவர் முன்னாள் கல்வி அமைச்சர் கபில்சிபல். இவர்கள் இருவருமே வழக்கறிஞர்கள்; காங்கிரஸ்காரர்களும் கூட.எந்த பக்கம் இருக்கின்றனரோ, அந்த பக்கத்துக்கு தகுந்த மாதிரி பேசுவதில் வல்லவர்கள். ஆளும் தரப்பில் இருந்தால் ஒருபேச்சு. அதுவே எதிர்க்கட்சியாகிவிட்டால் வேறொரு பேச்சு. வழக்கறிஞர்கள் அல்லவா; அப்படித்தான் பேசுவர்.
நீட் தேர்வை யார் கொண்டு வந்தது. 2010ல் நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான். உண்மை இவ்வாறு இருக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சித் தத்துவத்தை பற்றியெல்லாம் இவர்கள் வாதிடுகின்றனர்; வேடிக்கையாக உள்ளது. இவை பற்றியெல்லாம் பேசுவதற்கு காங்கிரஸ்காரர்களான இவர்களுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது. 2010ல் நீட்டை கொண்டுவந்த சிதம்பரம், 2024ல், நீட்டால் அநீதி இழைக்கப்படுகிறது என்கிறார்.
மத்திய கல்வி அமைச்சராக இருந்தவர் கபில்சிபல். அப்போதெல்லாம் அதுபற்றி யோசிக்காத, கவலைப்படாத கபில்சிபல், இப்போது மாநில சுயாட்சி பற்றி பாடம் எடுக்கிறார்.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்கிறார் கபில்சிபல். கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு போனது யார். 1976ல், நெருக்கடி நிலையின்போது காங்கிரஸ்தானே அதைச் செய்தது. இந்த உண்மைகள் இரு வழக்கறிஞர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் எதுவும் தெரியாதது போல நடிக்கின்றனர்.
கூட்டாட்சி தத்துவத்தை படுகொலை செய்த இவர்கள், மாநில சுயாட்சி பற்றியெல்லாம் பேசலாமா? இரண்டு வழக்கறிஞர்கள், இப்போது கூட்டாட்சிக்கு ஆதரவாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக சிதம்பரத்துக்கு, இப்போதாவது மாநில சுயாட்சி பற்றி அக்கறை வந்திருக்கிறதே. அதற்காக பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் பிறந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று சிதம்பரம், தனது உரையில் பேசுகிறார். நான் அவரைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்தை நினைத்து பார்த்தது உண்டா. நிதி எவ்வளவு ஒதுக்கினீர்கள்? நீங்கள் அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு நிதியே தரவில்லை. நீங்கள் நிதி தராத காரணத்தால், தமிழகம் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை வரலாறு பேசும். நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். இவ்விஷயத்தில் தே.ஜ.,கூட்டணியை குறை கூற கூடாது.இவ்வாறு பேசினார்.
தம்பிதுரையின் கடுமையான விமர்சனத்தை தாங்க முடியாமல், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கொந்தளித்தனர். ஆனாலும், அசராமல் சிதம்பரத்தையும், கபில்சிபலையும் தன்னுடைய பேச்சில் கடைசி வரை வறுத்தெடுத்தார் தம்பிதுரை
-- நமது டில்லி நிருபர் -.