பா.ம.க.,வை விமர்சிக்காமல் அடக்கி வாசிக்கும் அ.தி.மு.க.,
பா.ம.க.,வை விமர்சிக்காமல் அடக்கி வாசிக்கும் அ.தி.மு.க.,
ADDED : ஏப் 09, 2024 11:17 PM

லோக்சபா தேர்தல் தேதி நெருங்க நெருங்க பிரசாரம் வெயிலை விட அனல் பறக்கத் துவங்கி விட்டது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிகளவில் எதிர்கட்சியான அ.தி.மு.க., மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, தேர்தல் களத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க., சார்பில் மாஜி அமைச்சர் சண்முகம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆரம்பத்தில் பா.ம.க., குறித்து விமர்சித்து வந்தாலும், தற்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.,வைப் பற்றி அதிகளவில் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக தி.மு.க., அளவிற்கு பா.ம.க.,வை விமர்சிக்காமல் அடக்கி வாசிக்கின்றனர். இதற்கு பதிலாக பா.ம.க.,வை நேரடியாக விமர்சிக்காமல், கூட்டணி வைத்துள்ள பா.ஜ., இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி என்றும், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற பிரசாரத்தை அ.தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, வடமாவட்டத்தில் மற்ற கட்சிகளுக்கு இணையாக பா.ம.க., விற்கு ஓட்டு வங்கி உள்ளது.
பா.ம.க.,வை நேருக்கு நேர் எதிர்த்து விமர்சித்து பிரசாரம் செய்தால், அ.தி.மு.க.,விற்கு மறைமுகமாக விழும் பா.ம.க., ஓட்டு தங்கள் பக்கம் திரும்பாது என்பதால், அ.தி.மு.க., நிர்வாகிகள் இந்த யுக்தியை கையாள்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-நமது நிருபர்-

