புதிய தொழில்நுட்பத்தில் கட்டுமானம்; 'டெண்டர்' மதிப்பு நிர்ணயிப்பதில் பிரச்னை
புதிய தொழில்நுட்பத்தில் கட்டுமானம்; 'டெண்டர்' மதிப்பு நிர்ணயிப்பதில் பிரச்னை
ADDED : ஆக 13, 2024 02:25 AM

சென்னை : பாரம்பரிய முறைக்கு மாற்றாக, புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்த, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டும் திட்டங்களில் செலவை குறைப்பதற்கு, மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதில், 'பிரிபேப்' எனப்படும், முன்தயாரிப்பு கட்டுமானங்கள், 'மோனோ லித்திக்' முறையில் செங்கல் இன்றி சுவர் அமைத்தல், அலுமினியத்தை பயன்படுத்தும் கான்கிரீட் கட்டுமானங்கள் போன்றவற்றால் வழக்கத்தை விட, 30 சதவீதம் வரை செலவு குறையும்.
இதனால், அதிக வீடுகள் கட்டும் திட்டங்களில், இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், நாடு முழுதும் ஏழு நகரங்களில் மாற்று தொழில்நுட்பத்தில் குடியிருப்பு திட்டங்கள் சோதனை முறையில் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை, இப்புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், நிர்வாக ரீதியாக இதற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செலவு குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.
ஆனால், இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த, 'டெண்டர்' விடும் போது, விலை மதிப்புகளை முடிவு செய்ய, பொதுப்பணி துறையின் விலை பட்டியலை பயன்படுத்த, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், மத்திய பொதுப்பணி துறையின் கட்டுமான பொருட்களுக்கான விலைப்பட்டியல் தான், புதிய தொழில்நுட்ப கட்டுமான திட்டங்களுக்கு ஏற்றது என, நிதித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. தமிழக பொதுப்பணி துறையின் விலைப் பட்டியலை பயன்படுத்த, தணிக்கை ரீதியாக அதிக ஆட்சேபங்கள் வருகின்றன.
இதனால், எந்த விலைப்பட்டியல் அடிப்படையில், புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

