ADDED : ஆக 10, 2024 02:58 AM

சென்னை: திருச்சி மாவட்டம், திருச்செந்துறை மற்றும் சில கிராமங்களில் உள்ள நிலங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தம் என எழுந்த பிரச்னை காரணமாகவே, மத்திய அரசு வக்பு சட்டத்தை திருத்த முன்வந்துள்ளது.
கடந்த 2022ல், திருச்சி மாவட்டம் திருசெந்துறை கிராமத்தில், முள்ளிகளப்பூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், தனக்கு சொந்தமான, 1.2 ஏக்கர் நிலத்தை விற்பதற்காக, சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினார்.
அந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என, பதிவுத்துறை தலைவரிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
'இங்குள்ள நிலத்தை விற்க வேண்டும் என்றால், தங்களிடம் தடையின்மை சான்று பெற வேண்டும்' என தமிழக வக்பு வாரியம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பதிவுத்துறை தலைவர் இந்த அறிவிக்கையை பிறப்பித்தது தெரிய வந்தது.
இதேபோல, பல கிராமங்களி லும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, திருச்செந்துறை கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ள நிலமும், வக்பு வாரிய பட்டியலில்இருப்பதாகக் கூறியதால், இப்பிரச்னை பெரிதானது. 2022ம் ஆண்டு செப்டம்பரில், பதிவுத்துறை உயரதிகாரிகள், வக்பு வாரிய சொத்து என்ற அறிவிக்கையை திரும்பப் பெற்று, பத்திரப்பதிவுகளை தொடர அனுமதித்தனர்.
'வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று, ஒரு சொத்து குறித்து கடிதம் அளிப்பதற்கு, சட்ட ரீதியாக முறையான வரையறைகள் இல்லை. எனவே, வக்பு வாரியத்தில் இருந்து வரும் கடிதங்கள் அடிப்படையில், பத்திரப்பதிவை நிறுத்தக் கூடாது என, சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என பதிவுத்துறை தெரிவித்தது.
நம் நாளிதழ் செய்தி
ஒரு சொத்து மீது உரிமை கொண்டாட முன்வரும் நபரிடம், அதற்கான சட்டப்பூர்வ ஆவணம் இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்று ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், வக்பு வாரிய அதிகாரிகள், கள ஆய்வு அறிக்கை என்ற பெயரில் சொத்துக்களை உரிமை கொண்டாட அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.
சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதை முறையாக, சர்வேயர்கள் வைத்து அளந்து உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் இன்றி சொத்துக்களை வக்பு வாரியம் பட்டியலிட்டதே பிரச்னைக்கு காரணம்.
இந்த காரணங்கள் அனைத்தும், 2022 செப்டம்பரில் நம் நாளிதழில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்த பின்னணியில் தான் மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்தம் வந்துள்ளது.

