முதல்வர் நடத்தி வைத்த திருமணம் 'ஜெயலலிதா வாழ்க' கோஷத்தால் அதிர்ச்சி
முதல்வர் நடத்தி வைத்த திருமணம் 'ஜெயலலிதா வாழ்க' கோஷத்தால் அதிர்ச்சி
ADDED : பிப் 24, 2025 02:03 AM

நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன், அந்த மக்கள், 'ஜெயலலிதா வாழ்க' என கோஷமிட்ட சம்பவம், முதல்வரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக கடலுார் சென்ற முதல்வர் ஸ்டாலின், கடந்த 22ம் தேதி காலை வேப்பூர் அருகே நடத்தப்பட்ட 'பெற்றோரைக் கொண்டாடுவோம்' நிகழ்ச்சிக்காக நெய்வேலியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அம்மா வாழ்க
தி.மு.க.,வினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள், வழிநெடுக இருபுறமும் நின்று கொண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
வேப்பூருக்கு அருகில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கூடியிருந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கையசைக்க, கூடியிருந்த மக்கள், 'முதல்வர் ஐயா, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்கய்யா...' என்று உரக்க குரல் எழுப்பினர்.
அதைப் பார்த்ததும் உற்சாகமான முதல்வர், வாகனத்தை விட்டு கீழிறங்கி, நரிக்குறவ இன மக்கள் கூடியிருந்த இடம் நோக்கிச் சென்றார். தயாராக இருந்த ஜோடிக்கு, தாலி எடுத்துக் கொடுத்து, கட்டச் சொன்னார்.
அப்போது, மணமக்கள் வாழ்க என்று கோஷமிட்ட மக்கள், திடுமென, 'எம்.ஜி.ஆர்., வாழ்க; ஜெயலலிதா அம்மா வாழ்க' என உரத்த குரலில் கோஷமிட்டனர்.
'திருமணம் செய்து வைப்பது நாம்; நம்மை வாழ்த்துவதை விட்டுவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி வாழ்க கோஷம் எழுப்புகின்றனரே' என அதிர்ச்சி அடைந்தார், முதல்வர் ஸ்டாலின்.
இதனால், அப்செட்டான முதல்வர் ஸ்டாலின், அதை உடனடியாக காட்டிக் கொள்ளாமல், அடுத்த நிகழ்ச்சிக்கு கிளம்பி சென்றார். ஆனால், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து, இதுகுறித்து சொல்லி தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
40 குடும்பங்கள்
'நரிக்குறவ இன மக்களோடு மக்களாக, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் நுழைந்து, ஜெயலலிதா வாழ்க என கோஷம் போட்டிருப்பரோ என சந்தேகிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து, நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் வடக்கு சேப்லநத்தம் கிராமத்துக்கு தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் சென்று, அங்கிருக்கும் மக்களிடம் விசாரித்துள்ளனர்.
தி.மு.க.,வினரிடம் பேசிய அக்கிராம மக்கள், 'இங்கு எங்கள் இனத்தைச் சேர்ந்த மக்கள், 120 பேர் வரை வசிக்கிறோம்; ௪௦ குடும்பங்கள் உள்ளன.
'இரு நாட்களுக்கு முன், தி.மு.க.,வின் கம்மப்புரம் முன்னாள் ஒன்றிய செயலர் செந்தமிழ்செல்வன் அனுப்பி வைத்ததாக, கட்சியினர் சிலர் கிராமத்துக்கு வந்து, முதல்வர் நிகழ்ச்சியைச் சொல்லி, அவரை வரவேற்க வரணும்னு சொன்னாங்க.
'அப்ப, எங்கள் இனத்தின் சார்பில் இயங்கும் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் காபிதுரை மற்றும் செயலர் மணி ஆகியோர், ஊர் சார்பில் ஒரு கோரிக்கை வெச்சாங்க.
'ஊருக்குள்ள அம்மா - அப்பா இல்லாம இருக்கும் சுரேஷ், 24, என்ற பையனுக்கும், அப்பா இல்லாத பெண் வடிவுக்கும், 22, திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கோம்.
எம்.ஜி.ஆர்., வாழ்க
'முதல்வர் கல்யாணத்தை நடத்தி வெச்சு, சீர் செஞ்சா நல்லா இருக்கும். அதுக்கு சம்மதம்னா, ஊரே திரண்டு முதல்வரை வரவேற்க வர்றோம்' என்று சொன்னாங்க.
'அதன் அடிப்படையிலேயே, முதல்வரை வரவேற்கப் போனோம். அவர்கள் என்னவெல்லாம் சொன்னரோ, அதுபடிதான் எல்லாமே நடந்துச்சு. முதல்வரையும் திருமணம் செஞ்சு வைக்க அழைச்சதும், அவரும் ஆர்வத்தோட தான் வந்தார்; திருமணமும் செஞ்சு வெச்சார்.
'ஆனால், ஆர்வ மிகுதியிலும், பழக்க தோஷத்திலும் எங்கள் இன மக்களில் ஒருசிலர், 'ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., வாழ்க' என கோஷமிட்டு விட்டனர்.
'காலம் காலமா நாங்க அவங்களோட விசுவாசி. அவங்களைத்தான் எங்களுக்குப் பிடிக்கும். இருந்தாலும், தி.மு.க., தரப்பில் நல்லது செஞ்சா, வர்ற தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுவோம்' என அப்பாவியாக சொல்லி உள்ளனர்.
கூடவே, 'சுரேஷுக்கு சீர் செய்வோம்னு சொல்லி இருந்தாங்க; அதை செய்யலை' என்றும் புகாராகச் சொல்லி உள்ளனர்.
தற்போது இந்த விஷயத்தை கட்சியினரும், உளவுத் துறையினரும் முதல்வருக்கு கொண்டு சென்றதாகவும், அதன்பின், முதல்வர் சமாதானமானதாகவும் தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர்
- நமது நிருபர் -.

