மருந்து, மாத்திரையும் இல்லை புகார் அளிக்க வசதியும் இல்லை
மருந்து, மாத்திரையும் இல்லை புகார் அளிக்க வசதியும் இல்லை
ADDED : மார் 06, 2025 01:27 AM

சென்னை: முதல்வர் மருந்தகத்தில், வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்து கிடைக்காதது தொடர்பாக புகார் அளிக்க, பொது தொலைபேசி எண் உள்ளடக்கிய வசதி ஏற்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழக அரசு, மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்து, மாத்திரைகள் கிடைக்க, மாநிலம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை துவக்கியுள்ளது. தனியார் தொழில் முனைவோரும், கூட்டுறவு சங்கங்களும் இவற்றை நடத்துகின்றன.
இந்த மருந்தகங்களில், வெளிச்சந்தையை விட, 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் விற்கப்படுகின்றன. கேட்கும் மருந்துகள் கிடைக்காதது உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க வசதி ஏற்படுத்துமாறு, வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தனியார் மருந்தகங்களில் கேட்கும் மருந்துகள் இல்லை என்றாலும், பதிவு செய்து வாங்கி வைப்பதாகவும், நாளைக்கு வருமாறும் கூறுவர். முதல்வர் மருந்தகத்தில், சில மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில்லை. நாளைக்கு வந்தால் கிடைக்குமா என்றாலும் பதில் இல்லை.
மருந்தக வேலை நேரமும் தெரிவதில்லை. இது குறித்து, கூட்டுறவு அதிகாரிகளிடம் கேட்டாலும் தகவல் தெரிவிப்பதில்லை.
எனவே, முதல்வர் மருந்தகம் தொடர்பாக புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும், தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும். மேலும், மருந்தகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்களையும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.