நாணய மூட்டைகளுடன் வரும் சுயேச்சைகள்; 2011ம் ஆண்டு சட்டத்தில் இருக்கிறது தீர்வு
நாணய மூட்டைகளுடன் வரும் சுயேச்சைகள்; 2011ம் ஆண்டு சட்டத்தில் இருக்கிறது தீர்வு
ADDED : மார் 27, 2024 07:32 AM

வேட்பு மனு தாக்கல் செய்யும் சுயேச்சை வேட்பாளர்கள் மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டு வந்து, அதிகாரிகளின் மேஜையில் குவிக்கும் பிரச்னைக்கு, நாணயவியல் சட்டத்தில் தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது என வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் ஒருவர், 1,250 பத்து ரூபாய் நாணயங்களை மூட்டையாக கட்டி எடுத்து வந்து, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதுபோல, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சுயேட்சை வேட்பாளர்கள் பலர் 'டிபாசிட்' செலுத்த சில்லறை காசுகளை கொண்டு தேர்தல் அதிகாரிகளின் மேஜைகளில் குவித்து விடுகின்றனர்.
'டிபாசிட்' பணம் ரொக்கமாக இருந்தால் எண்ணுவது சுலபமாக இருக்கும்; அதிகாரிகளுக்கு நேரமும் மிச்சமாகும். ஆனால், சில்லறைகளுடன் வரும் வேட்பாளர்களால் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர்.
இந்திய அரசின் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்பதால், வேறுவழியின்றி, தேர்தல் அதிகாரிகளும் ஒருவழியாக அவற்றை எண்ணி முடித்து, வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்கின்றனர்.
இதற்கான தீர்வை, கடந்த 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாணயவியல் சட்டம் கூறியுள்ளது. இந்த சட்டம் குறித்து சீனியர் வக்கீல்கள் கூறியதாவது:
இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களை அல்லது ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுப்பது சட்டப்படி குற்றம்.
உத்தரபிரதேசத்தில் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்தற்காக தேச துரோக வழக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124-ஏ கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் வெளியிட்ட பணத்தை ஏற்க மறுப்பது குற்றம்.
அதே நேரத்தில், நாணயங்களை வழங்குவதிலும் ஒழுங்குமுறை உள்ளது. தடையில்லாத பொருளாதாரத்திற்காக சில்லறை நாணயங்களை இந்திய அரசு புழக்கத்தில் விட்டுள்ளது.
நாணயங்கள் ஒரே இடத்தில் தேக்கமடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நாணயவியல் சட்டம் -2011 பிரிவு-6ல் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ரூபாய்க்கு குறையாத நாணயங்களாக இருந்தால் மொத்தமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே நாணயங்களாகசெலுத்த முடியும். அதற்கு மேற்பட்ட தொகையைசெலுத்தினால், நாணயவியல் சட்டம் 2011ன் படி அந்த பணத்தை ஏற்காமல் தேர்தல் அதிகாரிகள் மறுக்க முடியும். இருப்பினும் இப்பிரிவு விவாதத்திற்குரியது.
ஆயிரம் ரூபாய்க்கு மேல் நாணயங்களை கொண்டு வந்தார் என்பதற்காக அது தண்டனைகுரிய குற்றமாக கருத முடியாது.
அதேநேரத்தில், நாணயவியல் சட்டத்தை சுட்டிக்காட்டி சட்டப்படியாக செலவாணி இல்லை என தேர்தல் அதிகாரிகள் மட்டுமின்றி எவராலும் மறுக்க முடியும். ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. வங்கிகள்கூட இதனை தெளிவுப்படுத்தவில்லை.
இதுபோல, தேர்தல் 'டிபாசிட்' விஷயத்திலும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. சில்லறைகள் 'டிபாசிட்' விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுத்து அறிவித்தால் தான், ஒவ்வொரு தேர்தலிலும் சில்லறைகளால் தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்படும் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு, வக்கீல்கள் கூறினர்.
-நமது நிருபர்-

