திருமாவளவன் குற்றச்சாட்டு: ஆளும் கூட்டணியில் 'உரசல்'
திருமாவளவன் குற்றச்சாட்டு: ஆளும் கூட்டணியில் 'உரசல்'
ADDED : ஜூன் 27, 2024 07:03 AM

டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் கலந்து விற்கப்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டை, ஆளுங்கட்சி தரப்பு ரசிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக, தி.மு.க-., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னையில் இருதினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வி.சி., தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள், காவல் துறையை கண்டித்தும், அரசு நிர்வாகத்தை விமர்சித்தும் பேசினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், 'கட்சி கொடி நடுவதற்கு சென்றால் காவல் துறை தடுக்கிறது. 'கள்ளச்சாராயத்தை மட்டும் விற்பனை செய்ய ஏன் தடுக்கவில்லை? காவல் துறைக்கும், உளவுத் துறைக்கும் இது தெரியாமல் இருந்திருக்காது. அவர்களுக்கு தெரிந்தே இப்படிப்பட்ட செயல் நடந்துள்ளது' என்றார்.
திருமாவளவன் பேசுகையில், 'பூரண மதுவிலக்கு முடிவை துணிந்து எடுக்க வேண்டும். இந்தியாவே முதல்வர் ஸ்டாலினை திரும்பி பார்க்கும். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களில், சீல் உடைக்கப்பட்டு, அதில் கள்ளச்சாராயம் கலந்து பொய்யான சீல் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது' என்றார்.
அரசு மீதான இந்த குற்றச்சாட்டு தான், கூட்டணியில் உரசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோனார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. கூட்டணிக்கான அரசியல் என்பது வேறு; தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு; மக்களுக்கான அரசியல் என்பது வேறு.
மக்கள் நலனுக்கான கோரிக்கையை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக, அ.தி.மு.க.,வினர் போல கருப்பு சட்டை அணிந்து, சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தும், கவர்னரை சந்தித்தும் எதிர்ப்பு அரசியல் நடத்தவில்லை.
ஆளும் கூட்டணி கட்சி என்ற முறையில் மதுவிலக்கின் அவசியத்தை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில் சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -