இது 'தானா சேர்ந்த' கூட்டமில்லை: பிரசாரத்தில் குவிக்கப்படும் 'பெய்டு' பார்வையாளர்கள்
இது 'தானா சேர்ந்த' கூட்டமில்லை: பிரசாரத்தில் குவிக்கப்படும் 'பெய்டு' பார்வையாளர்கள்
UPDATED : ஏப் 08, 2024 05:43 AM
ADDED : ஏப் 08, 2024 04:46 AM

மதுரை : தேர்தல் பிரசாரத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை வைத்து அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு, வெற்றி அளவுகோல் நிர்ணயிக்கப்பட்ட காலம் மாறி, இப்போது 40 சதவீதம் கட்சியினர் கூட்டங்களுக்கு வந்தாலே பெரிய விஷயமாகி விட்டது. மீதமுள்ள 60 சதவீதம் வெற்றிடத்தை அனைத்து கட்சிகளுமே 'பெய்டு' பார்வையாளர்களை (பணம் கொடுத்து ஆட்களை அழைப்பது) கொண்டு தான் நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 'ரோடு ேஷா' என்றாலும், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் என்றாலும், பழனிசாமி பொதுக் கூட்டம் என்றாலும் இந்த 'பெய்டு' பார்வையாளர்களை அழைத்தால் தான் அந்த பிரமாண்டமாக இருக்கும். நிகழ்ச்சிகளும் களைகட்டும்.
இதற்காக மாவட்டம் தோறும் நகர் முதல் கிராமங்கள் வரை ஏராளமான ஆண், பெண் ஏஜன்ட்டுகள் உள்ளனர். கட்சியினர் இவர்களிடம் நாள், நேரம் குறித்த தகவல் தெரிவித்துவிட்டால் போதும் வேன், ஆட்டோ, டிராக்டர் என கிடைக்கும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்து பிரசார, பொதுக் கூட்டம் நடக்கும் நிகழ்ச்சியின் இடங்களை நிரம்பி விடுவர். அதற்காக பெண்களுக்கு தலா ரூ.200, ஆண்களுக்கு தலா ரூ.300 கட்சியின் சார்பில் ஏஜன்ட் வழியாக வழங்கப்படும். இதுதான் தமிழக அரசியல் களத்தில் கூட்டம் சேர்ப்பதற்கான எழுதப்படாத வழிமுறையாக உள்ளது.
ஆனால் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒருநேர பிரசாரத்திற்கு சம்பந்தப்பட்ட வட்ட செயலாளர்கள், வார்டு பொறுப்பாளருக்கு (கட்சிகளை பொறுத்து) ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை தேர்தல் செலவுக்காக வழங்கப்படுகிறது.
அதில் தான் பிரசாரத்திற்கான ஸ்பீக்கர் வசதி, கொடிகள், வரவேற்பு பேனர்கள், சால்வை, மாலை மரியாதைக்கான ஏற்பாடுடன், அழைத்து வரப்படும் 'பெய்டு' பார்வையாளர்களையும் 'கவனிக்க' வேண்டும். பொதுக்கூட்டங்கள் என்றால் ஒருநாள் கவனிப்பு பெண்களுக்கு ரூ.300, ஆண்களுக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி கூட்டங்களுக்கு ஆட்களை சப்ளை செய்யும்' ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:
நகர் பகுதியில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர், கிராமப் பகுதியில் காட்டு வேலை, 100 நாள் வேலை திட்டம் பயனாளிகள் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி என்றால் முதல் ஆளாக வந்துவிடுவர்.
ஆனால் தற்போது நடுத்தர குடும்பங்களில் வேலைக்கு செல்லாத வீட்டில் இருக்கும் பெண்களும் அதிக ஆர்வத்துடன் பார்வையாளர்களாக வருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க., என பெரிய கட்சிகள் என்றால் அவர்களுக்குள் நான், நீ என போட்டியும் இருக்கும்.
ஆனால் காங்., உள்ளிட்ட சில கட்சிகளில் அவ்வளவாக 'கவனிப்பு' இருக்காது. அந்தந்த அமைச்சர், மா.செ.,க்களை பொறுத்து இதுபோன்ற பார்வையாளர்களுக்கு பணம் தவிர, சாப்பாடு, கூல்ட்ரிங்ஸ் என வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல் என்றால் ஆண்களுக்கு 'சரக்கு' 'சைடுடிஷ்' என களைகட்டும். ஆனால் லோக்சபா தேர்தலில் செலவு அதிகம் என்பதால் பெரும்பாலும் 'அப்படி' இருக்காது.
ஆனால் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கிராமங்களில் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு, மறுநாள் அந்தந்த கிராமங்களிலேயே ஏதாவது ஒருவர் வீட்டு விழா எனக் கூறி பொதுவான இடத்தில் கிடாய் வெட்டி அசைவ விருந்து வைத்துகட்சியினர் அசத்தி விடுவர்.
இதுபோன்ற 'பெய்டு' பார்வையாளர்களுக்கான செலவினங்களை தேர்தல் அதிகாரிகள் சேகரிப்பதும் கடினம் என்பதால் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சில நாட்களுக்கு எங்களுக்கு 'கிராக்கி' தான் என்றார்.

