தி.மு.க.,வில் 2 எம்.பி., பதவிகளுக்கு இரண்டு சமுதாயத்தினர் கடும் போட்டி
தி.மு.க.,வில் 2 எம்.பி., பதவிகளுக்கு இரண்டு சமுதாயத்தினர் கடும் போட்டி
ADDED : மார் 12, 2025 04:21 AM

தமிழகத்தைச் சேர்ந்த, 6 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் முடிவடைவதால், இந்த, 6 இடங்களுக்கான தேர்தல், அதற்கு முன்னதாக நடக்க உள்ளது. தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிகிறது. தேர்தலில் போட்டி இல்லாதபட்சத்தில், தி.மு.க.,க்கு மீண்டும் நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்; அ.தி.மு.க.,வும் இரு எம்.பி., பதவிகளை தக்க வைக்கும். ஆளும் தி.மு.க.,வில் ம.நீ.ம., தலைவர் கமலுக்கு, இம்முறை எம்.பி., பதவி தரப்பட உள்ளது.
மீதமுள்ள மூன்றில் ஒன்று, சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது. அதுபோக, மீதமுள்ள 2 எம்.பி., பதவிகளுக்கு, அக்கட்சியில் கடும் போட்டி காணப்படுகிறது. குறிப்பாக, வன்னியர், ஹிந்து நாடார் சமுதாயங்களைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர்கள் இப்பதவிகளை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த கட்சி நிர்வாகிகள், ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். எப்படியும் எம்.பி.,யாகி விட வேண்டும் என்ற முறையில் தீவிரத்தில் இருக்கும் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களையும், மாநில நிர்வாகிகளையும் பிடித்து வலுவாக காய் நகர்த்துகின்றனர். இதற்காக, அடிக்கடி அறிவாலயம் வந்து மூத்த தலைவர்களை சந்திக்கின்றனர்.
இதற்கிடையில், ராஜ்யசபாவில் நீண்ட நாட்களாக, வன்னியர், ஹிந்து நாடார் சமுதாயத்தினருக்கு தி.மு.க., சார்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால், இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வன்னியர் சமுதாயத்தில், 4 பேர் மோதுகின்றனர். திருவள்ளூர் முன்னாள் மாவட்டச் செயலர், சேலத்தைச் சேர்ந்த மாணவரணி மாநில நிர்வாகி, தர்மபுரி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் ஆகியோர் பதவி கேட்டு காய் நகர்த்துகின்றனர்.
ஹிந்து நாடார் சமுதாயத்தில், தென்காசி மாவட்ட முன்னாள் செயலர், கடலுாரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., துாத்துக்குடி மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகி ஒருவர், தலைமைக்கு கோரிக்கை மனு அளித்து காத்திருக்கின்றனர்.
ஆளாளுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆசைப்பட்டு, தி.மு.க.,வில் இருக்கும் தலைவர்கள் பலருக்கும் நெருக்கடி கொடுப்பதால், யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதில் தலைமை குழம்பிப் போய் உள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -