UPDATED : மே 19, 2024 03:27 AM
ADDED : மே 19, 2024 02:25 AM

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில், உருது மொழி ஒரு பிரச்னையை கிளப்பியுள்ளது. மறைந்த சிவசேனா தலைவர் பால் சாகிப் தாக்கரே தீவிர ஹிந்து; காங்கிரசை கடுமையாக எதிர்த்தவர். இவருடைய மகன் உத்தவ் தாக்கரே, பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி, காங்., ஆதரவுடன் மஹாராஷ்டிரா முதல்வரானார்; பின், இவருடைய கட்சி இரண்டாக உடைந்தது.
'ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அமைப்பு உண்மையான சிவசேனா' என, தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. தற்போது, ஏக்நாத் ஷிண்டே பா.ஜ., ஆதரவில் முதல்வராக உள்ளார். உத்தவ் தாக்கரே கட்சியினர், உருது மொழியில் ஒரு காலண்டர் அச்சடித்துள்ளனர்; அதில், ஜனாப் பால் தாக்கரே என, பாலா சாகிப் படத்தை போட்டுள்ளனர். இதை, தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், 'இதை ஒரு போதும் பாலா சாகிப் ஒத்துக் கொள்ள மாட்டார்; இது, அவருக்கு உத்தவ் செய்த துரோகம்' என, அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த உத்தவ், 'இந்த காலண்டரை நான் அச்சடிக்க சொல்லவில்லை. கட்சியில் யாரோ செய்துள்ளனர்' என, மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், பா.ஜ., இதை தீவிர பிரசாரமாக்கி உள்ளது.

