வாக்காளர்களே...பார்த்து !தேர்தலில் 3 இயந்திரம், 37 சின்னங்கள்:ஓட்டுப்பதிவன்று காத்திருக்கு குழப்பம்!
வாக்காளர்களே...பார்த்து !தேர்தலில் 3 இயந்திரம், 37 சின்னங்கள்:ஓட்டுப்பதிவன்று காத்திருக்கு குழப்பம்!
UPDATED : ஏப் 02, 2024 11:04 AM
ADDED : ஏப் 02, 2024 02:21 AM

கோவை;கோவையில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களின் பெயர்களில், சுயே., வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்களுக்கு ஒதுக்கியுள்ள சின்னங்கள், வாக்காளர்களை குழப்ப வாய்ப்பிருக்கிறது.
கோவை லோக்சபா தொகுதியில், 4 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், 7 பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள், 26 சுயே., வேட்பாளர்கள் என, 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பட்டன்கள் உள்ளன. அதனால், மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 37 வேட்பாளர்களின் பெயர், சின்னங்களுக்குபின், 38வது பட்டன் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும்.
முதல் இரண்டு இயந்திரங்களில், 32 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களுடன் கூடிய 'பேலட் ஷீட்' பொருத்தப்படும். மீதமுள்ள ஐந்து வேட்பாளர்கள் மற்றும் நோட்டா சின்னத்துடன் கூடிய 'பேலட் ஷீட்', மூன்றாவது இயந்திரத்தில் பொருத்தப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுடன் கூடிய பேலட் ஷீட், முதலாவது இயந்திரத்தில் பொருத்தப்படும்.
அ.தி.மு.க., வேட்பாளரான ராமச்சந்திரன் பெயரிலேயே, இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் பெயர்கள், இரண்டாவது இயந்திரத்தில் வருகிறது.
இதில், எம்.ராமச்சந்திரனுக்கு இரு விளக்குகளுடன் கூடிய மின்கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது; இரட்டை இலை போல் தெரிகிறது. ஆர்.ராமச்சந்திரனுக்கு கேரம் போர்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க., வேட்பாளரான ராஜ்குமார் பெயரில், நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களுடன் கூடிய 'பேலட் ஷீட்' மூன்றாவது இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன. ஜி.ராஜ்குமாருக்கு லேப்டாப், ஜி.பி.ராஜ்குமாருக்கு கேக், எம்.ராஜ்குமாருக்கு திராட்சை, இன்னொரு ராஜ்குமாருக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலாவது இயந்திரத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள், இரண்டாவது இயந்திரத்தில் அ.தி.மு.க., வேட்பாளரின் பெயரில் உள்ள சுயே., வேட்பாளர்களின் சின்னங்கள், மூன்றாவது இயந்திரத்தில் தி.மு.க., வேட்பாளரின் பெயர்களில் உள்ள சுயே., வேட்பாளர்களின் சின்னங்கள், இடம் பெற உள்ளன.
ஓட்டுப்போட உள்ள வாக்காளர்கள், சின்னங்களை பார்த்து நிச்சயம் குழம்பி விடுவார்கள்.

