இலக்கை எட்டாமல் ஓயமாட்டோம்!: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
இலக்கை எட்டாமல் ஓயமாட்டோம்!: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
UPDATED : ஏப் 12, 2024 10:25 AM
ADDED : ஏப் 12, 2024 12:53 AM

அமெரிக்க வார இதழான, 'நியூஸ் வீக்' பத்திரிகைக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். வர இருக்கும் தேர்தல், மக்களின் ஆதரவு, இந்திய ஜனநாயகம், ஊடக சுதந்திரம், எதிர்கால இந்தியா, சிறுபான்மை அரசியல், காஷ்மீர், சீனா... என்று பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசும் பேட்டி.
மற்ற கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதாவையும், மற்ற தலைவர்களிடம் இருந்து நரேந்திர மோடியையும் வேறுபடுத்தும் விஷயங்கள் எவை என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகிறார் மோடி. சுவாரசியமான பேட்டியின் முதல் பகுதி இது...
இந்த தேர்தலிலும், மக்கள் உங்களுக்கு தான் ஓட்டு போடுவர் என்று எதிர்பார்க்க காரணம் என்ன?
மக்கள் தான் காரணம். அதாவது, தேர்தலில் ஓட்டு வாங்க கட்சிகள் வாக்குறுதிகள் தரும். அதை நம்பி ஓட்டு போடுவர். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு அந்தக் கட்சி சுத்தமாக வாக்குறுதியை மறந்து விடும். இதைத்தான் இந்திய மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். நாங்கள் அப்படிப்பட்ட கட்சி அல்ல.
கொடுத்த வாக்குறுதிகளை அதிகபட்சம் நிறைவேற்றி இருக்கிறோம். பா.ஜ., வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றும் என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.அடுத்து, ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் தனித்தனியாக நல்லது செய்வோம் என, நாங்கள் வாக்கு கொடுப்பது இல்லை. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா ப்ரயாஸ் என்று வாக்கு கொடுக்கிறோம். அதாவது, ஒற்றுமை, வளர்ச்சி, நம்பிக்கை, முயற்சி எல்லாமே அனைவருக்காக என்கிறோம்.
சொல்வதோடு நில்லாமல் அதை செயலில் காட்டுகிறோம். எங்கோ யாருக்கோ ஒரு நல்லது நடந்தால், நாளை அல்லது மறுநாள் அது நமக்கும் நடக்கும் என்று, ஒவ்வொரு குடிமகனும் நம்புகிற சூழலை உருவாக்கி இருக்கிறோம். உலக பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து, ஐந்தாம் இடத்துக்கு நம் நாடு முன்னேற இதுவே காரணம்.
உலகில் பல நாடுகளில், அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், அந்தக் கட்சி மீதும், தலைமை மீதும் சலிப்பு தட்டுவது இயல்பு. ஆனால், உலக இயல்புக்கே மாறாக என் மீதும், எங்கள் கட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. தேர்தலில் அதன் எதிரொலியை நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் ஆட்சியில், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமாகி விட்டது, ஊடக சுதந்திரம் மங்கி விட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில்?
இந்திய அரசியல் சட்டம் சொல்வதால் மட்டுமே, இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. ஜனநாயகம் என்பது இந்தியர்களின் மரபணுவில் குடிகொண்டுள்ள இயல்பு. ஜனநாயகத்தின் தாயே இந்தியா தான். வெறும் பெருமைக்காக இதை சொல்லவில்லை. தமிழகத்தில் உத்திரமேரூர் என்ற சிற்றுார் இருக்கிறது. அங்குள்ள ஒரு கல்வெட்டில் பொறித்திருப்பதை பார்த்தால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
எவையெல்லாம் ஜனநாயக மாண்புகள் என்று, அந்த கல்வெட்டிலே, 1,200 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்திருக்கின்றனர் முன்னோர்கள். அதற்கும் முன்னால் எழுதப்பட்ட எங்கள் இலக்கியங்கள், இதிகாசங்களை படித்தால் பிரமித்து போவீர்கள். பழங்கால இந்திய மன்னர்கள் எவ்வளவு துாரம் ஜனநாயகத்தை பேணி வளர்த்தனர் என்பது தெரியும்.
தன்னிச்சையாக அல்லாமல், மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழுக்களை அமைத்து, அவர்கள் அறிவுரைப்படி மக்கள் நலனுக்காக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினர், எங்கள் அரசர்கள். நாட்டில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே தவிர குறையவில்லை. இந்த மாதம் நடக்கும் தேர்தலில், 97 கோடி பேர் ஓட்டு போட காத்திருக்கின்றனர்.
ஜனநாயகத்தில் இந்திய மக்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிச்சமிட்டுக் காட்ட இதைவிட பெரிதாக யாரும் சர்டிபிகேட் கொடுத்து விட முடியுமா என்ன?
ஊடக சுதந்திரம் மங்கி விட்டதாக கூறுவது, உண்மை அறியாதவர்களின் கருத்து என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டில் ஒன்றரை லட்சம் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டு, எத்தனையோ மொழிகளில் வெளியாகின்றன. நுாற்றுக்கணக்கான செய்தி சேனல்கள், 24 மணி நேரமும் இயங்குகின்றன.
இந்தியாவில் நடக்கும் எந்த நிகழ்வும், இந்த ஊடகங்களின் பார்வைக்கு தப்பாது. ஒரு ஜனநாயக நாடு முன்னெடுத்து செல்ல வேண்டுமானால், நாட்டில் என்ன நடக்கிறது; மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியவேண்டும். இத்தனை ஊடகங்கள் சிறப்பாக செயலாற்றும் போது, எங்கள் அரசுக்கு அந்தக் குறை நிச்சயமாக இல்லை.
எல்லா நாட்டிலும் இருப்பதை போல, எங்கள் நாட்டிலும் சில மேதைகள் இருக்கின்றனர்.
வேகமாக மாறி வரும் உலகின் குடிமக்கள் என்ன நினைக்கின்றனர்; என்ன விரும்புகின்றனர்; அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல், இவர்களாகவே எதையாவது கற்பனை செய்து, மக்களின் விருப்பமும் அதுவே என்று நம்பி, ஊடகத்தில் அது பிரதிபலிக்கவில்லையே என ஆதங்கப்படுகின்றனர்.
உள் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம் என்ற பெயரில், இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளால் உலகின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு அதிகரிக்கும் தானே?
கட்டமைப்பை வலுப்படுத்துவது, எல்லா நாடுகளுக்கும் பொதுவான உரிமை. கடந்த 10 ஆண்டு காலத்தில் சாலைகள், விரைவு ரயில்கள், மெட்ரோ, துறைமுகங்கள், நீர்வழிகள், விமான போக்குவரத்து என அனைத்து வகையிலும், பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறோம்.
நாட்டின் முன்னேற்றம் என்பது, மக்களுக்கான வாய்ப்பு வசதிகளை பல மடங்கு பெருக்கிக் கொடுப்பதில் அடங்கியிருக்கிறது.
புவி வெப்பமயமாவதை தடுப்பது என்ற குறிக்கோள் எங்களுக்கும் இருக்கிறது. எங்கள் கட்டமைப்பு திட்டங்களுக்கும், அந்த குறிக்கோளுக்கும் முரண்பாடு இருப்பதாக சொல்வது தவறு.
சொல்லப்போனால், புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான முன் முயற்சிகளை வேறெந்த நாட்டையும் விட, நாங்கள் அதிகமாகவே எடுத்து வருகிறோம். சூரிய மின்சக்தி, அணுசக்தி, நீர்மின் சக்தி, மின்சார வாகனங்கள் என, பசுமை மின்சக்திக்காக மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்து கொண்டிருக்கிறோம்.
புவி வெப்பமயமாவதில் இப்போது இந்தியாவின் பங்களிப்பு பெரும்பாலான நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது.
எங்கள் பொருளாதாரம், அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் வளரும் போது, வெப்பமயத்துக்கு காரணமான கார்பன் உற்பத்தியில், எங்கள் பங்களிப்பு இன்னும் குறையும் அதிசயத்தை உலகமே பார்க்கப் போகிறது. முன்பே அறிவித்தபடி, 2070ல் கார்பன் வெளியீடு அறவே இல்லாத நிலையை, இந்தியா எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பொருளாதாரத்திலும், உற்பத்தியிலும் வெகுதுாரம் முன்னால் சென்று விட்ட சீனாவை இந்தியா எட்டிப்பிடிக்க முடியுமா?
வேறு யாரையும் மனதில் இருத்தி, இந்தியாவின் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படுவது இல்லை.
இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. உலகின் உற்பத்தி கேந்திரங்கள் திடீர் நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுக்கு, ஜனநாயக அரசியல் அமைப்பும் சட்டத்தின் மாட்சியை நிலைநாட்டும் நீதிமன்றங்களும் கொண்ட இந்தியா நேச்சுரல் சாய்ஸ்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் பேச்சளவில் கூட அதிகம் இடம் பெறாத, பல பொருளாதார சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
வரி விதிப்பை எளிமையாக்கி இருக்கிறோம். தொழில் துவங்குவது, நிர்வகிப்பது, விரிவுபடுத்துவது, முதலீடுகளை ஒழுங்குபடுத்துவது, உற்பத்தியுடன் இணைந்த சலுகைகள் வழங்குவது என, அடிப்படை களத்தையே சர்வதேச நியதிகளுக்கு பொருந்தும் வகையில் திருத்தி அமைத்திருக்கிறோம்.
உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய, பொருட்களை உற்பத்தி செய்ய பொருத்தமான இடம் இந்தியா என, பிரகடனம் செய்வதோடு நாங்கள் நின்று விடவில்லை.
இந்தியாவிலேயே உலகின் மிகப்பெரிய சந்தை ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது என்பதையும் விளக்கடித்து காட்டுகிறோம். இந்த அபூர்வமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது பன்னாட்டு நிறுவனங்களின் சாமர்த்தியம்.
'டிஜிட்டல் பேமென்ட்' எனப்படும், மொபைல் பணப்பரிமாற்ற கட்டமைப்பு இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. அதன் பின்னணி என்ன?
எங்கள் யுபிஐ பண பரிவர்த்தனை கட்டமைப்பு குறுகிய காலத்தில் உலகப்புகழ் பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது. மூன்று முக்கிய பாடங்களை இந்த வெற்றியில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
டெக்னாலஜி என்பது ஒளிவு மறைவு இல்லாத கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்; எந்த பிளாட்பாரத்திலும் செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும்; பெரிய அளவிலோ, மிகவும் சுருக்கமான அளவிலோ பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும்; பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது முதல் பாடம்.
ஒரு நபர் அல்லது கம்பெனிக்கு சொந்தமாக இல்லாமல், மக்களுக்கு சொந்தமான ஜனநாயக தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது பாடம். மக்கள் முட்டாள்கள் அல்ல, பாமரனாக இருந்தாலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரைவாக கற்றுக் கொள்வர் என்பதை நம்ப வேண்டும் என்பது மூன்றாவது பாடம்.
இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பம், வெவ்வேறு தடுப்புகளை தகர்த்ததையும், இப்போது தேசிய எல்லைகளை தாண்டி பல நாடுகளில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வருவதையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மூன்று லட்சத்துக்கும் மேலான இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயிலும் அமெரிக்காவிலும், யுபிஐ சேவைகள் அனுமதிக்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் நிறையவே பலன் கிடைக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நீண்டகாலம் தாங்குமா, அதன் பலன் அனைத்து மக்களுக்கும் கிடைக்குமா என்று நிபுணர்கள் சந்தேகம் கிளப்புகின்றனரே?
சீனாவையும், ஜப்பானையும் மனதில் வைத்து இந்த சந்தேகத்தை கிளப்புகின்றனர். அந்த நாடுகளுடன் ஒப்பிட நான் தயார் இல்லை. ஏன் என்றால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறான சவால்களை எதிர்கொள்ளும். எங்களை பொறுத்தவரை இந்தியா இன்று இளைஞர்களின் பூமி. சராசரி இந்தியன் வயது 28. இது, மிகப்பெரிய வரப்பிரசாதம்.
இந்த இளைஞர் படையை கொண்டு, எதிர்வரும் ஆண்டுகளுக்கான முன்னேற்ற திட்டங்களை, அடுத்த 20 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி விடலாம் என்று நம்புகிறேன். சுதந்திரத்தின் நுாறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில், உலகின் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இளைஞர்களை முன்னேற்றத்துக்கான கருவியாக மட்டுமின்றி, எதிர்காலத்தில் சந்திக்க நேர்கின்ற இயற்கையான மற்றும் செயற்கையான பேராபத்துகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எங்கள் நாட்டின் பாரம்பரியமும், கலாசாரமும் அந்த வேலையை சுலபமாக்குகின்றன.
உதாரணமாக, சேமிப்பு என்பது இந்திய சமூகத்தில் வேர்விட்டு பரந்திருக்கும் ஒரு மரபு. அடுத்ததாக, எங்கள் கூட்டுக் குடும்ப கலாசாரம். அதில் மையப்புள்ளியாக அமர்ந்திருப்பது மாண்புகள். நல்ல குணங்கள் இப்படி இயற்கையாகவே அமைந்திருப்பதால், எந்த ஒரு குடும்பத்திலும் எதற்கும் பயன்படாதவர் என்று, ஒரு ஆணோ, பெண்ணோ இருக்க மாட்டார்கள்.
கடலின் ஆழத்திலும், கண்ணுக்கு தெரியாத வானவீதிகளிலும் துணிச்சலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போது தட்டுப்பாடே இல்லாமல் நாட்டின் எல்லா முனைகளில் இருந்தும், இளைஞர்கள் தாராளமாக கிடைப்பது, அந்த பாரம்பரியத்தின் வெளிப்பாடு. கடந்த காலத்தை மறவாமலே எதிர்கால தொழில்நுட்பத்துக்கு உருவம் வரையும் பணியை அனாயாசமாக செய்யும் ஆற்றல் எங்கள் மக்களிடம் நிறைந்திருக்கிறது.
உலகின் எல்லா பகுதியிலும் மிகப்பெரிய நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள், நிர்வாக பயிற்சிக் களங்கள், துறைவாரியான அமலாக்க அமைப்புகள் என ஒவ்வொரு இடத்திலும் இந்திய இளைஞர்கள் உயர் பொறுப்புகளை வகிக்கின்றனர். அவர்களின் திறமை பல நாட்டு அரசுகளுக்கு பயன்படுகிறது. அங்கெல்லாம் ஏழ்மையை ஒழிக்கவும் வளர்ச்சியை வேகப்படுத்தவும் காரணிகளாக அவர்கள் சாதிக்கின்றனர்.
அன்னிய மண்ணில் சாதித்தவர்கள் பலரும், கடந்த 10 ஆண்டுகளில் தாய் மண்ணுக்கு திரும்பி வந்து சாதனைகளை தொடர்கின்றனர். ஏழ்மை ஒழிப்பிலும் கட்டமைப்பு திட்டங்களிலும் கணிசமாக பங்களிக்கின்றனர். அரசின் ஒத்துழைப்போடும், வழிகாட்டலோடும் அவர்கள் நிறைவேற்றும் காரியங்கள் சமூகத்தில் பல வகையிலும் பிரதிபலிக்கிறது.

