'இம்முறையும் மாற்றி ஓட்டளிப்போம்': மீனவர்கள் வாக்குவாதத்தால் திணறிய அனிதா
'இம்முறையும் மாற்றி ஓட்டளிப்போம்': மீனவர்கள் வாக்குவாதத்தால் திணறிய அனிதா
ADDED : மார் 08, 2025 12:35 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டை நேற்று முற்றுகையிட்ட மீனவர்கள், 'நான்கு ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை' என கேள்வி மேல் கேள்விகள் கேட்க, அமைச்சர் ஆடிப்போனார்.
துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் துாண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி, துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், துாத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு முன் நேற்று திரண்டனர்.
முக்கிய நிர்வாகிகளை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத் துறை அதிகாரிகளை அழைத்து, தருவைக்குளம் மீனவர்கள் வைக்கும் கோரிக்கை குறித்து பேசினார்.
பின், வீட்டுக்கு வெளியே வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திரண்டிருந்த மக்களை சந்தித்தார்.
அப்போது மீனவர்கள், அமைச்சரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பி, காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
விவாத விபரம்:
மீனவர்கள்: 1,500 படகுகள் உள்ள தருவைக்குளம் கிராமத்திற்கு மீன்வளத்துறை எதுவுமே செய்யவில்லை.
அமைச்சர்: தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகமும்; துாண்டில் வளைவும் அமைக்க வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்துள்ளோம். அவசரமாக எதுவும் செய்ய முடியாது. ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழு வரவேண்டும். அதன்பின்பே, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மீனவர்கள்: நாலு வருஷமா எதையும் செய்யாமல், இப்போதைய பட்ஜெட்டில் மட்டும் என்ன செய்து விடுவீர்கள்?
அமைச்சர்: திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதித் துறைக்கு அனுப்பப்படும். அதன்பின், முதல்வருக்கு சென்று, முறையான அறிவிப்பு வரும். கூப்பிட்டிருந்தால், நானே உங்க கிராமத்துக்கு வந்திருப்பேன்.
மீனவர்கள்: இப்படித்தான் நான்கு ஆண்டு காலமாக ஆய்வு நடக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு இதுதான் கடைசி பட்ஜெட். இதிலும் அறிவிக்கவில்லை என்றால், இந்த ஆட்சியில் எப்படி நடக்கும்?
அமைச்சர்: திட்ட மதிப்பீட்டுடன், முதல்வரிடம் எடுத்துக் கூறினாலே போதும். அவரே, திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவார்.
மீனவர்கள்: பத்து ஆண்டு களாக வலியுறுத்தியும், இப்போதுதான் ஆய்வுக்கே அனுப்பப்படுகிறதென்றால் எப்படி?
அமைச்சர்: நேரம் போகாமலா ஆய்வு செய்கிறோம்?
மீனவர்கள்: ஏற்கனவே, 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் எதுவும் செய்யவில்லை.
அமைச்சர்: யார் நிதி ஒதுக்கினர் என தெரியாது.
மீனவர்கள்: கடந்த ஆட்சியில் நடந்தது. இப்படித்தான், ஒவ்வொரு ஆட்சியாலும் கால தாமதம் ஏற்படுகிறது. ஆனால், பணிகள் ஏதும் நடக்கவில்லை. துாத்துக்குடி மாவட்டத்தில் அதிக விசைப்படகுகள் உள்ள தருவைக்குளம் கடற்கரையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.
அமைச்சர்: நான்தான், மீன் இறங்குதளத்தை விரிவுபடுத்தினேன்.
மீனவர்கள்: சின்ன சின்ன விஷயத்தை சாதனையாக சொல்லாதீர்கள்.
அமைச்சர்: செய்தவற்றைதான் சொன்னேன்.
மீனவர்கள்: கனிமொழி எம்.பி.,யையோ, முதல்வரையோ சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். நாங்களே அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
அமைச்சர்: எளிதாக கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், குறைவான நிதி என்றாலும், மத்திய அரசிடம் போராடித்தான் பெற வேண்டி உள்ளது.
மீனவர்கள்: நாங்கள் பா.ஜ.,வுக்கா ஓட்டு போட்டோம்? தி.மு.க.,வுக்குத்தானே போட்டோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 350 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் கட்டி தருவோம் என்று சொன்னீர்கள். அதையும் செய்யவில்லையே ஏன்?
அமைச்சர்: அதற்கும் ஆய்வு நடக்கிறது.
மீனவர்கள்: இப்படியே சொன்னால் எப்படி? போராட்டம் தான் தீர்வு என்றால், அதை நோக்கி செல்ல வேண்டியதுதான்.
அமைச்சர்: இதற்கு முன்பும் நிதி ஒதுக்கீடு செய்தும் பணி நடக்கவில்லை; அப்போது என்ன செய்தீர்கள்?
மீனவர்கள்: கடந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்பதால் தான், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டோம். இந்த ஆட்சியிலும் எதுவுமே நடக்கவில்லை என்றால், மீண்டும் மாற்றி ஓட்டளிக்க வேண்டியதுதான்.
பங்கு தந்தை வின்சென்ட்: ஊர் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டுமாவது முதல்வரை சந்திக்க வையுங்கள்.
அமைச்சர்: கனிமொழி எம்.பி.,யிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்.
இப்படி காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. பின்னர், மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.