'சேலஞ்ச் ஓட்டு' என்றால் என்ன? வாக்காளர்கள் இன்று கவனிக்க...
'சேலஞ்ச் ஓட்டு' என்றால் என்ன? வாக்காளர்கள் இன்று கவனிக்க...
UPDATED : ஏப் 19, 2024 04:57 AM
ADDED : ஏப் 18, 2024 11:51 PM

கோவை: இன்று ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், 'சேலஞ்ச் ஓட்டு' என்றழைக்கப்படும் 'சவால் ஓட்டு' பற்றி, வாக்காளர்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, நேற்று சென்ற நிலையில், இன்று காலை 5:15 மணியிலிருந்து 7:00 மணிக்குள், முகவர்களை வைத்து மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
தாங்கள் செலுத்தும் சின்னத்துக்கு சரியாக ஓட்டுகள் விழுகின்றனவா என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில், முகவர்கள் சரிபார்ப்பர். ஓட்டுப்பதிவுக்கு பின், இந்த ஓட்டுகள் சரிபார்க்கப்பட்டு, 'ரீ செட்' செய்து விடுவர். ஓட்டுப்பதிவு சரியாக இருக்கும் பட்சத்தில், இதுகுறித்து முகவர்களிடம் கையெழுத்தும் பெறப்படும். மாதிரி ஓட்டுப்பதிவுக்கான ஆதாரங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருப்பர்.
ஒரு ஓட்டுச்சாவடியில், வேட்பாளர் ஒருவருக்கு ஒரு முகவர் மட்டுமே இருப்பார். காலை 7:00 மணி முதல், வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவு துவங்கும்.ஓட்டுப்பதிவுக்கு செல்லும்போது எடுத்து செல்ல வேண்டிய ஆவணத்தை, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை எடுத்து செல்ல தவறக்கூடாது. இதில், 'சேலஞ்ச் ஓட்டு' எனப்படும், 'சவால் ஓட்டு' எவ்வாறு பதிவிடுவது என்று, சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பரவி வருகிறது.
இதில், 'நீங்கள் ஓட்டுச்சாவடி சென்று, அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை காட்டி வாக்குரிமை சட்டம் 49Aன் கீழ், 'சேலஞ்ச் ஓட்டு' கேட்டு ஓட்டு பதிவு செய்யுங்கள்' என்று தகவல் பரவுகிறது.
ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் ஓட்டுப்பதிவு செய்ய முடியாது. சேலஞ்ச் ஓட்டு என்பது, வாக்காளர் ஒருவரின் அடையாளம் பற்றி முகவர் ஆட்சேபனை தெரிவிப்பது தான். முகவர் இப்படி தெரிவிக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து ரூ.2 பெறுவார்கள். ஆட்சேபனை தவறு என்றால், அந்த வாக்காளர் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆட்சேபனை சரி எனில், அந்த வாக்காளரை போலீசில் ஒப்படைப்பர்.
பின், முகவரிடமிருந்து பெற்ற ரூ.2ஐ அவரிடம் திருப்பி வழங்குவர். இது தான் சேலஞ்ச் ஓட்டு.

