அறம் மறந்த அறநிலையத்துறை; மரம் வீழ காரணமானது ஏனோ?
அறம் மறந்த அறநிலையத்துறை; மரம் வீழ காரணமானது ஏனோ?
UPDATED : ஜூலை 21, 2024 05:46 AM
ADDED : ஜூலை 21, 2024 12:38 AM

பல்லடம்;பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பல நுாறு ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணி துவங்கியுள்ளது. இதற்காக, கோவில் முன்புறம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, கோவிலின் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட உள்ளன.
திருப்பணி மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ள நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றும் பணி நடந்தது.
இன்றைய தொழில்நுட்ப முறையில், மரங்களை வேருடன் பெயர் எடுத்து வேறு இடத்தில் நடுவதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால், கோவில் வளாகத்தில் உள்ள நுாறு ஆண்டு பழமையான மரங்கள் வேருடன் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்துதமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அறநிலைய துறையோ மரங்களைக் காக்காமல் அவற்றை வெட்டி வீழ்த்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீண்ட நெடுங்காலமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அறநிலையத் துறையின் அலட்சியம் காரணமாக இன்று விறகாக மாறியுள்ளன.
குழாய் பதிப்பு, ரோடு விரிவாக்கம் என, பல்வேறு பணிகளின்போது எண்ணற்ற மரங்கள் கண் முன்னே காணாமல் போய் வருகின்றன.
இச்சூழலில், கோவில்களில், 'ஸ்தல விருட்சங்கள்' என, மரங்களை பேணிக்காத்து வரும் அறநிலையத்துறையும் மரங்களை வெட்டி வீழ்த்தும் பணியை, 'சிறப்பாக' செய்ய துவங்கி உள்ளது.