நடிகர் விஜய் கட்சியில் விரைவில் ஐக்கியமாகும் வி.ஐ.பி.,க்கள் யார்?
நடிகர் விஜய் கட்சியில் விரைவில் ஐக்கியமாகும் வி.ஐ.பி.,க்கள் யார்?
ADDED : செப் 01, 2024 05:35 AM

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அடுத்த மாதம் 22ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது. தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த சில புள்ளிகள், அந்த மாநாட்டில் இணைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
சட்டசபை தேர்தலை குறிவைத்து, விஜய் களமிறங்கி இருக்கிறார். தமிழகத்திற்கான புதிய மாற்றுக் கட்சியாக, த.வெ.க., உருவெடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
முதல் மாநாடும், அதன் பிரகடனமும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.
அவர் எதிர்பார்த்த அளவுக்கு, கட்சிக்கொடி அறிமுக விழா கைகொடுக்கவில்லை. அதுபோன்று மிகச் சாதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக, மாநாட்டு ஏற்பாடுகளில் அவரும், கட்சியினரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த மாநாடும், அதன் எழுச்சியும் பேசப்பட வேண்டுமானால், அந்த மேடையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான முக்கிய புள்ளிகள் சிலர் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கான பேச்சு நடந்து வருகிறது.
திராவிட மற்றும் தேசிய கட்சிகளில் பணியாற்றி, அனுபவம் உள்ளவர்கள், தற்போது அதிருப்தியாக இருப்பவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன.
தி.மு.க.,வில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சரின் வாரிசு, முன்னாள் பெண் எம்.பி., ஒருவரும் இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வில் புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், விஜய் அழைப்புக்காக விண்ணப்பம் போட்டு காத்திருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய பெண் அமைச்சர், முன்னாள் தலைவர் ஒருவரும், நடிகர் விஜயை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளனர்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து பா.ஜ.,வில் இணைந்து, அங்கு முக்கியத்துவமின்றி இருக்கும் சிலரும், மத்திய அரசின் வாரியத் தலைவர் பதவி, கவர்னர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்களும் கூட, விஜய் பக்கம் வர திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் பச்சைக்கொடி காட்டியதும், அவர்கள் வரிசையாக த.வெ.க.,வில் இணைவர்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -