அரசு பஸ் யாருக்காக? வரி செலுத்தும் மக்களுக்காகவா... வணிக நிறுவனங்களுக்காகவா?
அரசு பஸ் யாருக்காக? வரி செலுத்தும் மக்களுக்காகவா... வணிக நிறுவனங்களுக்காகவா?
UPDATED : ஜூன் 19, 2024 07:21 AM
ADDED : ஜூன் 19, 2024 02:29 AM

அரசு பஸ்கள் முழுவதுமாக விளம்பரங்களை அமைப்பது, சட்டத்துக்கு விரோதமானது மட்டுமின்றி, ஐகோர்ட் உத்தரவை அப்பட்டமாக மீறுவதென்று புகார் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் அரசு பஸ்களில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், பஸ்சின் பின் புறத்தில், கண்ணாடிக்குக் கீழேயுள்ள பகுதியில் ஒரு போர்டு அமைத்து, அதில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. அதன்பின், பக்கவாட்டுகளில் மேற்புறத்திலும் அதிலுள்ள கண்ணாடிகளிலும், விளம்பரங்கள் வரையப்பட்டன.
கவனச்சிதறல்
பஸ்களின் பின்புறங்களில் உள்ள போர்டுகளில் விளம்பரம் வைத்தாலே, பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவது, சாதாரணமாக நடக்கும். இதில் கண்ணாடியின் பின்புறம் முழுவதும் வரையும் போது, பஸ்சை ஓட்டும் டிரைவருக்கும் பின்புறத்தைப் பார்ப்பது இயலாததாகி விடுமென்று, இதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.
![]() |
அப்பட்டமான விதிமீறல்
'அரசு பஸ்களில் விளம்பரங்கள் வைப்பது, தமிழ்நாடு மோட்டார் வாகனச்சட்டம் 343 மற்றும் 368 பிரிவுகளை மீறுவதாகும்' என்று, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் குற்றம்சாட்டியது.
மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 100 (2)ன் படி, கண்ணாடியில் 70 சதவீதத்துக்கும் குறைவாகத் தெரியும்வகையில் மறைக்கப்படக்கூடாது என்ற விதிமுறை மீறப்பட்டிருந்ததையும், அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக, 2009ல் பொதுநல மனுவையும் இந்த அமைப்பு (WP 6818/2009) தாக்கல் செய்தது.
அப்போது ஐகோர்ட் அளித்த உத்தரவின்படி, அரசு பஸ்களில் அதீத விளம்பரம் செய்வது நிறுத்தப்பட்டு, விதிமுறைகளும் திருத்தப்பட்டன. அதற்குப் பின், பின்புறங்களில் மட்டும் விளம்பரங்கள் வைக்கப்படுவது, வழக்கமாக நடந்து வந்தது.
பயணிகள் பஸ்தானா?
ஆனால் சமீபகாலமாக,அரசு பஸ் என்று அடையாளமே தெரியாத அளவுக்கு, மொத்தமாக ஸ்டிக்கர்களால் மூடும், புதிய விளம்பர யுக்தி (Bus body wrapping) கையாளப்படுகிறது. இதில் பஸ்சின் எல்லாப் பக்கங்களிலும், கண்ணாடிகளிலும் முழுமையாக விளம்பர ஸ்டிக்கர்களால் மூடப்படுகின்றன.
அரசு பஸ்களில் விளம் பரங்கள் செய்வதற்கு, மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டரிடம் முறையாக லைசென்ஸ் பெற வேண்டும்; இதற்கான உரிமத் தொகை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்குச் செலுத்தப்பட வேண்டும். பஸ்களின் பின்புறமும், உட்புறங்களில் மட்டுமே விளம்பரங்கள் வைக்கப்பட வேண்டும். மற்ற எந்தப் பகுதியிலுமே, விளம்பரங்கள் இடம் பெறக்கூடாது.
பஸ்சின் நிறம் மாற்றம்
ஜன்னல்களுக்கு மேற்புறத்தில் கண்ணாடிகள் இருந்தால், அந்த பேனல்களில் விளம்பரங்கள் வைக்கலாம். ஆனால் டிரைவருக்கு முன்பாகவுள்ள கண்ணாடிகளைத் தவிர, ஒட்டு மொத்த பஸ்களிலும் வளைத்து, வளைத்து விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மோட்டார் வாகன விதிகள், கோர்ட் உத்தரவுகள் அத்தனையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாகனத்துக்கும் அந்த பஸ்சின் நிறம் குறித்து, ஆர்.சி.புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மாற்றுவது சட்டவிரோதமாகும். இப்போது அரசு பஸ்களில், ஒட்டு மொத்தமாக விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும்போது, பஸ்சின் நிறமும் முழுக்க முழுக்க மாறி விடுவதால், அரசே அரசின் சட்டத்தை மீறுவதாக, கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், இத்தகைய விதிமீறல் விளம்பரங்கள், எந்த தனியார் பஸ்களிலும் இதுவரை அமைக்கப்படவில்லை. ஒரு வேளை அரசு பஸ்களில் உள்ள இந்த விளம்பரங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அதிவிரைவில் தனியார் பஸ்களிலும், இந்த விதிமீறல் தலை விரித்தாடத் துவங்கி விடும். அதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் ஐகோர்ட்டில் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்!
-நமது சிறப்பு நிருபர்-