லோக்சபா முதல் கூட்டத்தொடரின் இடைக்கால சபாநாயகர் யார்?
லோக்சபா முதல் கூட்டத்தொடரின் இடைக்கால சபாநாயகர் யார்?
UPDATED : ஜூன் 16, 2024 01:24 PM
ADDED : ஜூன் 16, 2024 03:51 AM

லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதில், பா.ஜ., மட்டும், 240 தொகுதிகளை கைப்பற்றியது.
காங்.. தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி, 234 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதில், காங்., மட்டும், 99 தொகுதி களை கைப்பற்றியது.
வரும் 24ல் துவங்கி, ஜூலை 3 வரை, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. முதல் மூன்று நாட்கள், புதிய எம்.பி.,க்களின் பதவியேற்பு நடக்கவுள்ளது. தொடர்ந்து, சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது.
இதையடுத்து, 27ல், பார்லி., கூட்டுக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார். இதன்பின், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கும்.
இந்நிலையில், புதிய லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக யார் நியமிக்கப்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சபையை நடத்துவது இடைக்கால சபாநாயகரின் பொறுப்பு.
பொதுவாக, லோக்சபாவின் மூத்த எம்.பி., இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவதுண்டு. அதன்படி, இடைக்கால சபாநாயகருக்கான போட்டியில், காங்., - எம்.பி., கே.சுரேஷ், பா.ஜ., - எம்.பி.,க்கள் ராதாமோகன் சிங், பர்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் உள்ளனர்.
இதில், கேரளாவின் மாவேலிகரா தொகுதியில் இருந்து எட்டு முறை எம்.பி.,யாக தேர்வான கே.சுரேஷ் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டால், பிரதமர் மோடி உட்பட புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ராதாமோகன் சிங், பர்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர், ஏழு முறையாக எம்.பி.,யாக உள்ளனர்.
கடந்த 2019ல், 17வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில், பா.ஜ., - எம்.பி., வீரேந்திர குமார், ஏழு முறை எம்.பி.,யாக இருந்ததால், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
அப்போது, எட்டு முறை எம்.பி.,யாக இருந்த மற்றொரு பா.ஜ., - எம்.பி., மேனகா, இடைக்கால சபாநாயகராக மறுத்ததை அடுத்து, அந்தப் பதவிக்கு வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -