நான் ஏன் 'தினமலர்' படிக்கிறேன்? 50 ஆண்டு கால வாசகனின் நாட்குறிப்பு!
நான் ஏன் 'தினமலர்' படிக்கிறேன்? 50 ஆண்டு கால வாசகனின் நாட்குறிப்பு!
UPDATED : செப் 06, 2024 10:59 AM
ADDED : செப் 06, 2024 12:56 AM

தினமலர் இதழின் 50 ஆண்டு கால வாசகன் என்ற உயிர்ப்போடும், உணர்வோடும், உரிமையோடும், 'நான் ஏன் இத்தனை ஆண்டுகளாக தினமலர் படிக்கிறேன்' என சிந்தித்து பார்த்தேன். மனதில் தோன்றியதை இங்கே எழுதுகிறேன்.
தினமலர் ஒரு நாளிதழ் தானே. படிக்கிறோம்... படித்த பின் பழைய பேப்பர் ஆகிறது; அவ்வளவு தானே என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படி அல்ல; தினமலர் ஓர் அடையாளம்; தமிழ் வாசக குடும்பங்களின் வாழ்வின் அங்கம்.
வாசகர்களுக்கு வெறுமனே செய்தி தருவது மட்டும் தன் கடமை என ஒதுங்கி விடவில்லை தினமலர். அதனாலேயே, தினமலர் நாளிதழுக்கும், வாசகருக்குமான உறவு என்பது, ஒரு நாள் காலையில் நாளிதழை படித்து முடித்தவுடன் முடிந்து விடுவதில்லை. அது, பரம்பரை பரம்பரையாக படரும் பந்தம். அன்று கொள்ளு தாத்தா தினமலர் படித்தார்; இன்று பேரன்களும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
காரணம் என்ன?
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் என எந்த தரப்பையும் தவிர்க்காமல், சமூகத்தின் அத்தனை தரப்பு மக்களுக்கும் ஏதாவது ஒரு ஏற்றத்தை செய்திகளால் செய்து கொண்டிருக்கிறது தினமலர்.
பள்ளித் தேர்வுக்கு, உயர் கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள், அரசு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு கருத்தரங்குகள், தொழில் மேம்பாட்டு கருத்தரங்குகள், பெண்களின் ஆளுமை அதிகாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மனநல, உடல் நல, தன்னம்பிக்கை கருத்தரங்குகள், போட்டிகள், பரிசுகள், கொண்டாட்டங்கள் என, மக்களின் அன்றாட வாழ்வியலோடு இணைந்து பயணிக்கிறது தினமலர்.
இதை நான் சொல்லாமலே, நாளிதழை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரியும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் லட்சிய ஆசிரியர்களை கண்டுபிடித்து, ஆண்டுதோறும் விருது வழங்கி ஊக்குவிக்கிறது.
நேர்மையான நாளிதழ்
தினமலர் நாளிதழை பிடித்து போய், நான் படித்து வருவதற்கு வேறு முக்கிய காரணம், அது சமூகத்திற்கு சொல்லும் கருத்துக்கள். செய்திகள் வாயிலாக அது வலியுறுத்தும் நேர்மை, நீதி, நியாயம்; அநீதிக்கும், ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக போர்க்குரல் எழுப்பும் துணிச்சல்.
அதிகாரியான என் நண்பர் ஒருவர் கையில் எப்போதும் தினமலர் நாளிதழ் வைத்திருப்பார். காரில் சென்றாலும் முன்புறத்தில் தினமலர் இருக்கும். 'ஒரு தரமான நாளிதழை வாசிக்கும் தரமான வாசகன்' என்று பிறருக்கு அடையாளப்படுத்த இப்படி வைத்திருக்கிறாரோ என நினைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன். அவர் சொன்னது ஆச்சரியம்!
'நீங்கள் நினைத்ததும் சரி; கூடுதலாக ஒரு விஷயமும் இருக்கிறது. தினமலர் செய்திகளில் உண்மை, நேர்மை, நாணயம் இருக்கும். அதன் அதிதீவிர வாசகனான நானும் எப்போதும் நேர்மையாக இருக்கவே விரும்புகிறேன்.
'அந்த நாளிதழை கையில் வைத்திருக்கும் போது நாமும் நேர்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது. நேர்மையை சொல்லும் அடையாளமாக தினமலரை பார்க்கிறேன்' என்றார் நெகிழ்ச்சியாக!
பெரிய கார், வீடு வைத்திருக்கிறேன் என்பது போல, வீட்டு வாசலுக்கு தினமும் தினமலர் வருவதை சமூக அந்தஸ்தாக பெருமைப்படும் வாசகர்களையும் நான் அறிவேன்.
இப்படி உளவியல் ரீதியாக வாசக உள்ளங்களை உயர்வாக தொடுவது என்பது, ஒரு நாளிதழுக்கு கிடைக்கும் அதிகபட்ச அங்கீகாரம் என்பேன்.
நடுநிலை நாளிதழா...
'உண்மையின் உரைகல், நடுநிலை நாளிதழ், தேசிய நாளிதழ்' என்றெல்லாம் தினமலர் கூறிக் கொள்கிறது. தினமலரில் செய்தி வந்தால் அது உண்மையாகத் தான் இருக்கும் என்று வாசகர்கள் நம்புகின்றனர். எனவே, உண்மையாகவே உண்மையின் உரைகல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நடுநிலைக்கு வருவோம். ஆளுங்கட்சி செய்தி, ஆண்ட கட்சியின் செய்தியெல்லாம் தலைப்புச் செய்தியாக வெளிவரும் அதே நேரத்தில், நேற்று முளை விட்ட விஜய் கட்சி செய்தியும், தினமலர் நாளிதழில் தலைப்பு செய்தியாகிறது.
தினமலர் மக்கள் சார்ந்தது என்பதை செய்திகளால் உணர முடிகிறது. எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் தினமலர் செய்திகளை மேற்கோள் காட்டி பாராட்டும்; குறையும் சொல்லும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினும், அரசின் திட்டங்கள் பற்றி தினமலர் நாளிதழ் என்ன எழுதுகிறது என்று கவனிப்பதுண்டு. இவர்கள் பொது மேடையில் தினமலரை பாராட்டியும், குறை கூறியும் பேசியிருக்கின்றனர்.
இப்படி எந்தக் கட்சியும் சொந்தம் கொண்டாடாத, ஆனால் அதிக விமர்சனங்களை ஏற்று வாங்கும் நாளிதழாக தினமலர் இருக்கிறது. செய்திகளில், தினமலருக்கு என்று ஒரு பார்வை இருக்கிறது. இதனால், நடுநிலை நாளிதழ் என்று சொல்லும் தகுதி அதற்கு இருப்பதாகவே தோன்றுகிறது.
பெருமைக்குரிய வாசகர்கள்
மறைந்த தமிழகத்தின் முதல்வர்கள் பக்தவத்சலம், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் தினமலரின் பெருமைக்குரிய தீவிர வாசகர்கள். முதல்வராக இருந்த போது கருணாநிதி, அதிகாலையில் தினமலர் நாளிதழை படித்துவிட்டு, அதில் சுட்டிக் காட்டப்பட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார் என்பர்.
'தினமலர் நாளிதழில் செய்தி வெளியானால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும்' என்று நம்பும் என்னை போன்ற லட்சக்கணக்கான வாசகர்களே அதன் பலம்.
தேச ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு, பண்பாடு, கலாசாரம் என்று வந்து விட்டால், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தினமலர் செய்தி வெளியிடும் என்பது அறிந்ததே.
சமூக பொறுப்புணர்வு
சமூக பொறுப்புணர்வோடு செய்தி வெளியிடுவதில் தினமலர் 'டாப்!' ஜாதி, மதக் கலவரங்கள் நிகழ்ந்தால், அதில் எந்தப் பிரிவினர்கள் மோதிக் கொண்டனர் என்ற தகவலை, செய்தியை பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. அந்த கலவரம் காட்டுத்தீயாய் பரவி விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டு செய்திகள் எழுதப்பட்டிருக்கும்.
இரவில் நெடுஞ்சாலை பயணம் தவிர்ப்பீர், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவீர் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை தினமலர் செய்திகளில் இடையிடையே பார்க்க முடியும்.
இப்படி தினமலர் பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம். இத்தனை ஆண்டுகளில் எத்தனை கோடி செய்திகளை தினமலர் தந்திருக்கும். இன்னும் இன்னும் எத்தனை கோடி செய்திகளை வாசகர்கள் வசம் சேர்க்க இருக்கிறது என்பதே பிரமிப்பு. அதற்கு இந்த ஒரு நாள் நாட்குறிப்பு போதாது.
காகித ஆயுதம்
கவியரங்கம் ஒன்றில் கேட்ட ஹைக்கூ...
'தொட்டால் அது காகிதம்
தொடர்ந்து படித்தால் ஆயுதம்...
-பத்திரிகை!'
காகித ஆயுதமாக இருக்கும் தினமலர் நாளிதழுக்கு இந்த கவிதை நுாற்றுக்கு நுாறு பொருந்தும்.
என்னை போன்ற வாசகர்கள் எப்போதும் சுவாசிப்பதும், வாசிப்பதும் தினமலரே.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தின் நான்காவது துாணான பத்திரிகைகள் பலமாக இருக்க வேண்டும். அதற்கு தினமலர் போன்ற நாளிதழ்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர வேண்டும்; வாழ வேண்டும்.
பிறந்த நாள் வாழ்த்துகள் தினமலர்!
-- வி.குமார், மதுரை
கருத்துக்களை பகிர indiann1965@gmail.com

