போட்டியிடும் தொகுதியில் ஓட்டு போட வேட்பாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா?
போட்டியிடும் தொகுதியில் ஓட்டு போட வேட்பாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா?
ADDED : ஏப் 17, 2024 07:33 AM

சென்னை : போட்டியிடும் தொகுதிகளிலேயே, வேட்பாளர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். இவர்கள் தொகுதியில், ஒரு மாதமாக முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரம் முடிந்ததும், வேட்பாளர்களை தவிர, மற்றவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். எனவே, ஆதரவாளர்களை வெளியேற்றி விட்டு, தொகுதியில் தங்க வேண்டிய நிலை வேட்பாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், ஓட்டு போடுவதற்கு அவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஓட்டளித்த பின், போட்டியிடும் தொகுதிக்கு சென்று, அங்கு ஓட்டுச் சாவடிகளுக்கும், ஓட்டு எண்ணும் மையங்களுக்கும் செல்ல வேண்டிய முக்கிய பணி வேட்பாளர்களுக்கு காத்திருக்கிறது.
அருகில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் அங்கு செல்வது எளிது. ஆனால், வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களில் போட்டியிடுபவர்கள் நீண்ட துாரம் பயணிக்க வேண்டும். வாகனங்களை வேகமாக இயக்குவதால், விபத்துக்களை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு பணிகளை பார்வையிடுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது.
தற்போது, அரசு அலுவலர்கள், முதியோர்கள், தேர்தல் பணியில் உள்ள பத்திரிகையாளர்கள், தபால் ஓட்டுக்களை செலுத்துவதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, வேட்பாளர்களுக்கும் போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டளிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். வெற்றி பெற்றால், தொகுதியிலேயே தங்கி பணிபுரிவதாக வேட்பாளர்கள் பலரும் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
எனவே, அதற்கு முன்னோட்டமாக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க வேண்டும். அப்போது தான், அடுத்த தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிடும் போது, அவர் எத்தனை முறை தொகுதி மாறி போட்டியிடுகிறார் என்ற விபரம் மக்களுக்கு தெரியும். இந்த நடைமுறையை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

