தினந்தோறும் உருவாக்கப்படும் 1,000 மோசடி இணையதளங்கள்
தினந்தோறும் உருவாக்கப்படும் 1,000 மோசடி இணையதளங்கள்
ADDED : அக் 06, 2024 12:21 AM

புதுடில்லி: மோசடி கேமிங் செயலிகளை மக்கள் பயன்படுத்த வைப்பதற்காக, பல பிரபலங்களின் பெயர்களில் போலி வீடியோக்களை உருவாக்கி, அவற்றை வெளியிடுவதற்கு போலி இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.
தினந்தோறும் புதிது புதிதாக, 1,000 போலி இணையதளங்கள் இவ்வாறு உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் விளையாடும் நபர்களை குறி வைத்து, பல மோசடி கேமிங் செயலிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, மக்கள் பல கோடி ரூபாய்களை இழந்து வருகின்றனர்.
இதுபோன்ற மோசடி கேமிங் செயலிகளை, பிரபலங்கள் அங்கீகரிப்பது போன்ற போலி வீடியோக்களும் வெளியாகின்றன.
'டீப்பேக்' எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆள்மாறாட்ட வீடியோக்கள் இதற்காக தயாரிக்கப்படுகின்றன.
விராட் கோலி, முகேஷ் அம்பானி என பல பிரபலங்கள், இந்த கேமிங் செயலியை பயன்படுத்தும்படி மக்களை ஊக்குவிப்பதாக அந்த போலி வீடியோக்கள் அமைந்துள்ளன.
இதுபோன்ற போலி வீடியோக்களை உண்மை போன்று காட்டுவதற்காக, 'டிவி'க்களில் செய்தி வாசிப்பாளர்கள் கூறுவது போல், போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், அந்த செய்தி வாசிப்பாளர்கள், செய்திகளை கூறுவது போலவும், அதற்கிடையே விளம்பரம் வருவது போலவும், போலி வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த ஒட்டுமொத்த மோசடியையும் மக்களிடையே கொண்டு செல்ல, போலி இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதில், போலி கேமிங் செயலிகள் குறித்து, போலி செய்தி வாசிப்பாளர் கூறுவது போலவும், பிரபலங்கள் பரிந்துரை செய்வது போலவும் காட்டப்படுகின்றன.
இந்த வகையில், நாளொன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் பதிவு செய்யப்படுவதாக, 'கிளவுட் செக்' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற செயலிகளை, 'கூகுள் பிளே' செயலி தொகுப்புக்குள் இந்த மோசடியாளர்கள் நுழைப்பர். இந்த மோசடி தற்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
அதாவது, கூகுள் பிளே செயலி தொகுப்பையே போலியாக உருவாக்குகின்றனர்.
அதனால், எந்த ஒரு செயலியை பயன்படுத்தும்போதும், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, கிளவுட் செக் நிறுவனம் எச்சரித்து உள்ளது.