விற்பனையில் 'வளைத்துக் கட்டும்' மட்டன், சிக்கன் பிரியாணி; தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.11,000 கோடி
விற்பனையில் 'வளைத்துக் கட்டும்' மட்டன், சிக்கன் பிரியாணி; தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.11,000 கோடி
UPDATED : செப் 26, 2024 05:06 PM
ADDED : செப் 26, 2024 02:28 AM

சென்னை:அசைவ பிரியர்களின் அலாதியான ஐயிட்டமே பிரியாணி தான். மட்டன் பிரியாணி, சிக்கன் 65, கத்தரிக்காய் தொக்கு, பிரட் அல்வா... இந்த காம்பினேஷனுக்கு இணையே இல்லை என்பதே பிரியாணி பிரியர்களின் கருத்து. அதனால் தான், அசைவ உணவு வகையில் அனைத்தையும் விஞ்சி பிரியாணிக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
விருந்து, விசேஷம், கல்யாணம், காதுக்குத்து என எல்லா கொண்டாட்டத்திலும் இடம்பிடித்த பிரியாணி, இப்போது அன்றாட உணவாகி விட்டது. அதன் காரணமாக, விற்பனையும் களைகட்டுகிறது; உணவகங்களும் கல்லா கட்டுகின்றன.
மட்டன், சிக்கன் என இரு வகையாக தினமும் தயாரிக்கப்படும் பிரியாணிகளில் பல ரகங்கள் உண்டு. ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, பாசுமதி பிரியாணி, மொகல் பிரியாணி உட்பட, 10 வகைகள் மார்க்கெட்டில் பேமஸ்.
பிரியாணி வகைகளும், பிரியர்களும் அதிகரித்து வருவதால், அதன் வியாபாரமும் விரிவடைந்துள்ளது.
தமிழகத்தில் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத உணவகங்களில் ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கின்றன. அவற்றில், சென்னையின் பங்கு மட்டும் 5,500 கோடி ரூபாய். இது ஆண்டுதோறும், 10 சதவீதம் அதிகரித்து வருவது கூடுதல் தகவல்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில், இன்றைக்கு பிரியாணிக்காக மட்டுமே தனி உணவகங்கள் திறக்கப்படும் அளவுக்கு, விற்பனை அதிகமாகி வருவது குறித்து, 'ஜூனியர் குப்பண்ணா' மேலாண் இயக்குனரும், இந்திய தேசிய உணவக சங்க சென்னை பிரிவு இணை தலைவருமான ஆர்.பாலசந்தர் கூறியதாவது:
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பிரியாணி. பிரியாணி வாங்கினால், 'சைடு டிஷ்' வாங்க தேவையில்லை என்பதால், பலரும் பிரியாணி சாப்பிட விரும்புகின்றனர். அதனால், பிரியாணி விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜூனியர் குப்பண்ணாவுக்கு 49 கிளைகள் உள்ளன. அவற்றில் விற்பனையாகும் உணவு வகைகளில், 35 சதவீதம் பிரியாணி தான். ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பிளேட் என, ஆண்டுக்கு, 12 லட்சம் பிளேட் பிரியாணி விற்பனையாகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக, 3,000 பிளேட் பிரியாணி விற்பனையாகிறது. இதேபோல், பல உணவகங்களில் பிரியாணி விற்பனை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

